Header Ads



"தேர்தல் வெற்றிகளை ஒரு சமூகம் மாத்திரம், உரிமைகோரி கொண்டாடுவது ஆபத்தானதாகும்"

"ஜனநாயக நாடொன்றில் தனக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை தேர்வு செய்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காகவே தேர்தல்களும் நடாத்தப்படுகின்றன. நாட்டிலுள்ள எல்லா இன மக்களுமே வெற்றியின் பக்கமும் இருந்துள்ளனர்; தோல்வியின் பக்கமும் இருந்துள்ளனர்.  இந்நிலையில் , தேர்தல் வெற்றிகளை குறித்த ஒரு சமூகம் உரிமை கோரி கொண்டாடுவதும்,  அதேபோல  தோல்விகளை இன்னும் ஒரு சமூகத்தின் தலையில் பழி சுமத்துவதும் இந்நாட்டின் எதிர்காலத்துக்கும், சமூக ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தான ஒன்றாகும் " என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதித்தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர்  அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"2019ம் ஆண்டிற்கான ஜனாதிபதித்தேர்தல் தற்பொழுது முடிவடைந்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் வெற்றி பெற்று, பதவிப்பிரமாணமும் செய்துள்ளார்கள்.  இந்நிலையில், இத்தேர்தல் முடிவுகள் குறித்து பல்வேறுபட்ட விமர்சனங்களும், வியாக்கியானங்களும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.  ஜனாதிபதி கோத்தபாய அவர்களின்  வெற்றிக்கு நூறு வீதமான 'உரித்து'டையவர்கள் பெரும்பான்மை பௌத்த மக்களே என்றும்,  இத்தேர்தல் வெற்றியில் சிறுபான்மை சமூகங்களுக்கு எவ்வித உரித்துகளும் இல்லை என்கின்ற வகையிலுமான கருத்துக்கள்  பரவலாக முன்வைக்கப்பட்டு வருவதனை காணக்கூடியதாக உள்ளது.

இதே போன்றதொரு கருத்தாடல்கள் கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தல் முடிவின் போதும் முன்வைக்கப்பட்டன.  அப்பொழுது முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் வெற்றிக்கு 'சொந்தக்காரர்கள்' சிறுபான்மை மக்களே என்பதாக ‘உரிமை கோரல்கள்’  ஒரு பக்கத்திலும்,  மஹிந்த ராஜபக்ஷவின்  தோல்விக்கு சிறுபான்மை மக்களே  காரணம் என்ற குற்றச்சாட்டுக்கள் மறுபக்கத்திலுமென பல்வேறான வியாக்கியானங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. 
இவ்விரண்டு நிலைகளுமே பல்வேறு   விகிதாசாரங்களில்  பல்வேறு சமூகங்கள்  வாழும் ஒரு ஜனநாயக நாட்டில் ஆபத்தான போக்குகளாகும்.

 ஜனநாயக நாடொன்றில் தனக்கு விருப்பமான ஒரு வேட்பாளரை தேர்வு செய்கின்ற, அவருக்காக வாக்களிக்கின்ற உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காகவே தேர்தல்களும் நடாத்தப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே இம்முறையும் மக்கள் தங்களது வாக்குகளை தமக்கு  விருப்பமான வேட்பாளர்களுக்கு  அளித்திருந்தனர். இதனடிப்படையில் நாட்டிலுள்ள எல்லா இன மக்களுமே வெற்றியின் பக்கமும் இருந்துள்ளனர். தோல்வியின் பக்கமும் இருந்துள்ளனர்.இதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால், தேர்தல் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு  இனரீதியாக இன்று வடகிழக்கு மற்றும் மலையக தமிழ்-முஸ்லிம்  மக்கள் தனிமைப்படுத்தப்படுவதும் குற்றஞ்சாட்டப்படுவதும் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு மிகப்பாதகமானதாகும்.

இத்தேர்தலில் சுமார் 133 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதில் 69 இலட்சம் பேர் ஜனாதிபதி கோத்தபாய அவர்களுக்கும் , 64 இலட்சம் பேர் அவர் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கும் வாக்களித்துள்ளனர். இந்த 64 இலட்சம் மக்களில், சகல இன-மதங்களையும் சேர்ந்த மக்களும் இருக்கிறார்கள். இதிலும் பெரும்பான்மையானவர்கள் பௌத்த மக்களே  என்பது வெளிப்படையான உண்மையாகும். 

இவ்விடத்தில், இன்னுமொரு உண்மையினையும் கவனிக்க வேண்டும். 
வடகிழக்கிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் தமது வாக்குகளை இன ரீதியாகவோ அல்லது  மதவாத ரீதியாகவோ  யாருக்கும் அளிக்கவில்லை. அப்படி அவர்கள் வாக்களித்திருப்பின், முஸ்லிம்கள் சார்பாகவும் தமிழர்கள் சார்பாகவும் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கே அதிக வாக்குகள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெரும்பான்மையின பௌத்த சிங்களவரான வேட்பாளர்களுக்கே பெரும்பான்மையான வாக்குகளை வழங்கியிருந்தனர்.

இதன் மூலம் இந்நாட்டின் சிறுபான்மை மக்கள் மிகத்தெளிவான ஒரு செய்தியினை இந்த நாட்டுக்கு சொல்லியிருக்கிறார்கள். 

இனவாதமற்ற, ஒன்றுபட்ட, சுபீட்சமான ஒரு நாட்டில் அனைத்து இனங்களுடனும் ஒரு புரிந்துணர்வுடன் கூடிய சகவாழ்வினை வாழ்வதற்கே தாங்கள் விரும்புகிறோம் என்கிற செய்தியினையே அவர்கள் இம்முறை ஜனாதிபதித்தேர்தலினூடாக  தெரிவித்திருக்கிறார்கள்.

அது போன்று மற்றுமொரு விடயத்தினையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  

கடந்த 15ம் திகதிவரை கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஒரு கட்சிக்கான வேட்பாளராக மட்டுமே இருந்தார். ஆனால் 17ம் திகதி முதல் அவர் இந்த நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்குமான ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார். இந்த வெற்றியில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பும் நிச்சயமாக இருந்துள்ளது.

இத்தேர்தல் வெற்றியின் பின்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றியிருந்த உரையிலும் அவர் அனைத்து இனங்களையும் அரவணைத்துச்செல்லவிருப்பதாக உறுதியளித்திருந்தமை புது நம்பிக்கை தருவதாக இருக்கின்றது. நாம் எல்லோரும் எதிர்பார்க்கும் புதிய இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த அணுகுமுறையே மிக அடிப்படையில் அவசியமான ஒன்றாகும்.

எனவே தேர்தல் வெற்றிகளை குறித்த ஒரு சமூகம் உரிமை கோரி கொண்டாடுவதும் அதேபோல,  தோல்விகளை இன்னும் ஒரு சமூகத்தின் தலையில் பழி சுமத்துவதும் இந்நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தான ஒன்றாகும்.  எல்லா சமூகங்களையும் ஒன்றிணைக்கும் இலட்சியத்திற்கு இது விரோதமானதாகும்.

அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாக சத்தியப் பிரமாணம் செய்துள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் நாட்டின் அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்லுகின்ற ஒருவராக, அனைத்து இன மக்களின்அபிலாஷைகளையும் கருத்தில் கொண்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமையினையும் சகவாழ்வினையும் கட்டி எழுப்புவது மிக முக்கியமான ஒன்றாகும் . அப்போதே அவர் பெற்றிருக்கின்றன இந்த  தேர்தல் வெற்றியானது இந்த நாட்டின் வெற்றியாக அமைய முடியும்"

No comments

Powered by Blogger.