பேஸ்புக்கின் கொள்கைகள் குறித்து, இலங்கை சிவில் சமூகத்தினர் எச்சரிக்கை
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பேஸ்புக்கின் கொள்கைகள் குறித்து இலங்கை சிவில் சமூகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரசியல்வாதிகளின் தவறான தகவல்களை விளம்பரப்படுத்த அனுமதிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் சர்ச்சைக்குரிய முடிவு “பொருத்தமற்றது மற்றும் தீங்கு விளைவிக்கும்” என சிவில் சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தலைக் கண்காணிக்கும் குழுவினருக்கு ஆதரவு வழங்குமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சஞ்சன ஹட்தொட்டுவ, பேஸ்புக் நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்ய தலையீட்டு பிரச்சாரத்தை மேற்கொள்ள பேஸ்புக் உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டது.
அதன் பின்னர், பிற நாடுகளுக்கான தேர்தல் விளம்பரங்களை கண்காணிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்திய அனைத்து வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்பங்களை இலங்கையில் பேஸ்புக் நிறுவனம் அமுலாக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்காக விரைவாக முன்னெடுக்கப்பட்ட அதே மேற்பார்வை மற்றும் தொழில்நுட்பங்களை இலங்கையில் கிடைக்கச் செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
48 மணி நேரத்தில் அனைத்து அரசியல் பிரச்சாரங்களையும் தடை செய்து, நாட்டின் சட்டத்தை பேஸ்புக் நிறுவனம் எவ்வாறு செயல்படுத்தும் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment