Header Ads



கூட்டுப்பொறுப்பின்றி பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதால், மீளெழும் முயற்சி அழிவடையும்

கூட்டுப்பொறுப்பின்றி பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதால், மீளெழும் முயற்சி அழிவடையும் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பில் குறிப்பிட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் திஸ்ஸ அத்தநாயக்க அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

நவம்பர் 20 ஆம் திகதி வௌியிடப்பட்ட அகில விராஜ் காரியவசத்தின் அறிக்கையில் வேண்டுமென்றே உண்மை மறைக்கப்பட்டு, வொக்‌ஸ்ஹோல் வீதியிலிருந்த ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கை காரியாலயம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தின் பின்னரே, சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வேட்பாளரை அறிவிப்பதைத் தாமதப்படுத்தி வெற்றிக்கு பாரிய இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கீழ் மட்ட ஏற்பாடுகளை முன்னெடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அமைப்பாளர்கள் உள்ளிட்டோரை வழிநடத்தல், ஏற்பாடுகளை செய்தல், தொழிற்சங்கங்களை வழிநடத்தல் ஆகியன கட்சி தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற போதிலும், அது பாரிய முகாமைத்துவம் மற்றும் தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்பட்டதா என்பது குறித்து பொறுப்புக்கூற வேண்டிய அனைத்துத் தலைவர்களும் மனசாட்சிக்கு இணங்க நேர்மையாக சிந்திக்க வேண்டும் என இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சிக்குள் அவ்வாறான தலைமைத்துவம் கிடைக்கவில்லை எனவும், ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தலைமைத்துவத்தை விடவும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக முன்நின்றமையை கௌரவமாக நினைவுபடுத்துவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்களை ஏற்பாடு செய்தல், விசேட குழுக்களை தயார்ப்படுத்தல், ஐக்கிய தேசிய முன்னணி – அதனுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகள், அமைப்புகள், சிவில் குழுக்களை இணைத்தல், தேர்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியனவே வொக்ஸ்ஹோல் வீதியில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரியாலயத்தினால் முன்னெடுக்கப்பட்ட விடயங்கள் என திஸ்ஸ அத்தநாயக்க அறிக்கையில் கூறியுள்ளார்.

அந்த விடயங்கள் உச்சபட்சமாகவும் திறமையாகவும் முன்னெடுக்கப்பட்தாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேர்தல் நடவடிக்கை குழுவின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவம் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவிற்கு ஒப்படைக்கப்பட்டதாகவும் பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் கலந்துரையாடலிலும் கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இவை குறித்து வழங்கப்பட்ட ஆலோசனைகளை மீண்டும் நினைவுபடுத்துவதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மற்றும் வேட்பாளரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளுக்கும் நடவடிக்கை முகாமைத்துவப் பொறுப்பை வகித்த மலிக் சமரவிக்ரம, தவிசாளர் கபிர் ஹாஷிம், பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் ஆகியோருக்கு ஆலோசனை வழங்கியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வொக்ஸ்ஹோல் வீதியில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கை காரியாலயத்திற்கு கட்சியின் அமைப்பாளர்கள், முகாமையாளர்களை அழைக்க வேண்டாம் என மறைமுகமாக விடுக்கப்பட்ட அழுத்தத்தை தொடர்ந்தும் மறைத்து வைக்க முடியாது. இந்தத் தேர்தலில் நிதி வழங்கல் தொடர்பில் நிதிக்குழு நியமிக்கப்பட்டிருந்ததுடன், நான் அந்தக் குழுவின் உறுப்பினரோ இணைப்பதிகாரியோ அல்லது வேறு யாருமோ அல்லவென்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த விடயங்களையும் மலிக் சமரவிக்ரமவைத் தலைமையாகக் கொண்டு நிதிக்குழுவே முன்னெடுத்தது என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் அகில விராஜ் காரியவசம் அறிவார்

என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காரியவசத்தின் அறிக்கையில், கட்சி மீண்டும் மீளெழுவதற்கு எடுக்கும் முயற்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அழுத்தங்கள் தொடர்பிலும் திஸ்ஸ அத்தநாயக்க இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றி அல்லது தோல்வி நிச்சயமானது. கூட்டுப்பொறுப்பை ஏற்பதே முக்கியமானது. தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டியது எமக்குரிய கடமையாகும். அவ்வாறில்லாது பரஸ்பர குற்றச்சாட்டுக்களை சுமத்துவதால், மீளெழுவதற்கு எடுக்கப்படும் முயற்சி அழிவடையும். அத்துடன், குறைபாடு அல்லது பொறுப்புக்களிலிருந்து தவறியிருந்தால், அது எந்த வகையில் இடம்பெற்றிருந்தாலும் தேர்தல் நடவடிக்கையுடன் தொடர்புடையவர்கள் என்ற வகையில் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு பின்வாங்கி, அதிலிருந்து விடுபடுவது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்

என திஸ்ஸ அத்தநாயக்க தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.