விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி உருவாக்கி, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட நடவடிக்கை
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்கி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புத்திஜீவிகள் குழு ஒன்று இதற்கான பணிகளை ஆரம்பித்திருப்பதாகவும் இதற்கமைய சில சந்திப்புக்களை அவர்கள் நடாத்தி வருவதாகவும் தெரிய வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியுற்ற நிலையில் அங்கிருந்து வெளியேறி தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் ஆரம்பித்திருக்கின்றார்.
அதேபோல கூட்டமைப்பில் பங்காளிக் கட்சியாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனித்து இயங்கி வருகிறது. மேலும் கூட்டமைப்பில் இருந்த ஐங்கரநேசன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித் தனி கட்சிகளை ஆரம்பித்திருக்கின்றனர்.
இறுதியாக தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகம் ஶ்ரீகாந்தா உள்ளிட்ட சிலர், கூட்டமைப்பு தொடர்பாக கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்த நிலையில் அவர்கள் சார்ந்த கட்சியான ரெலோ இயக்கம் கட்சி தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதாக கூறி இவர்களை கட்சியிலிருந்த இடைநிறுத்தியுள்ள நிலையில் இவர்களும் புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளனர்.
இவ்வாறு முதலமைச்சரின் தமிழ் மக்கள் கூட்டணி ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் கூட்டமைப்பில் இருந்த வெளியேறி தற்போது புதிய கட்சிகளை ஆரம்பித்துள்ளவர்களின் கட்சிகளும் மற்றும் புதிதாக ஆரம்பிக்க உள்ள ஶ்ரீகாந்தாவின் கட்சி ஆகிய கட்சிகளை இணைத்து மாற்று அணி ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
ஆயினும் இந்த மாற்று அணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியர் இணைத்துக் கொள்ளப்படுகின்றனரா அல்லது அந்தக் கட்சியினர் இந்த மாற்று அணியில் இணைகின்றனரா என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் மாற்று அணியை உருவாக்குவதற்காகவே வடகிழக்கு புத்திஜீவிகள் குழுவினர் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய மாற்று அணியை உருவாக்கிய எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் புதிய மாற்று அணியாக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆக மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அந்தக் கூட்டமைப்பில் இருந்து வெளியெறியவர்கள் பலரும் ஒன்றிணைந்து மாற்று அணியாக களமிறக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு மாற்று மாற்று அணி மாற்றுத் தலைமை என்று கடந்த பல வருடங்களாக தெரிவித்து வந்தாலும் இப்போது அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment