"சபாநாயகர் பதவியில் கை, வைப்பதில்லை என தீர்மானம்"
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய ஆளும் தரப்பினருக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முழுவதும் கரு ஜெனசூரியவே சபாநாயகராக கடமையாற்றுவார் என்ற தீர்மானத்திற்கு அரசாங்கம் வந்துள்ளது.
டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்துடன் பாராளுமன்றத்தை ஒத்திவைக்கவும் மார்ச்சில் பாராளுமன்றத்தை கலைக்கவும் அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ள நிலையில் பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினர் தமக்கான சபாநாயகர் ஒருவரை நியமிக்கும் முயற்சிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகராக நியமிக்கும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வாசுதேவ நாணயக்கார எம்.பிக்கு சபாநாயகர் பொறுப்பு கொடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் தீர்மானம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி கூடும் பாராளுமன்ற அமர்வுகளின் போது ஆளும் கட்சியின் சார்பில் வாசுதேவ நாணயக்கார எம்.பியின் பெயரை சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்க இதன்போது தீர்மானம் எடுக்கப்பட்டது.
எவ்வாறு இருப்பினும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் சபாநாயகராக செயற்பட்டால் தான் ஒதுங்கிக்கொள்வதாக வாசுதேவ நாணயக்கார எம்.பி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று ஆளும் கட்சி தலைவர்களின் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையை கொழும்பில் கூடியது.
இதன்போது பாராளுமன்ற பதவிகள் எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்ற காரணிகளும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிலையில் தற்போது அரசாங்கம் ராஜபக்ஷவினர் வசம் இருந்தாலும் கூட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஐக்கிய தேசிய முன்னணி வசமுள்ள காரணத்தினால் சபாநாயகர் பதவியை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் உள்ளதை அறிந்துகொண்ட ஆளும் கட்சியினர் தற்போது சபாநாயகர் பதவியில் கைவைப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
இது குறித்து வாசுதேவ நாணயக்கார எம்.பி கூறுகையில்:- அரசாங்கம் எமது கரங்களில் இருந்தாலும் கூட பாராளுமன்றத்தில் பெரும்பான்மை அதிகாரம் எம்மிடம் இல்லை.
இன்னமும் ஐக்கிய தேசிய முன்னணியினர் வசமே பாராளுமன்ற அதிகாரம் உள்ளது.
ஆகவே சபாநாயகர் பிரச்சினை இப்போது வராது. அதுமட்டும் அல்ல கரு ஜெயசூரியவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க வாக்கெடுப்பு நடத்தவும் முடியாது.
அவ்வாறு நடத்தினாலும் நாம் தோற்போம். எனவே பாராளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்யவே இப்போது தீர்மானம் எடுக்கப்படுகின்றது.
அடுத்து புதிய பாராளுமன்ற அமர்வுகளில் இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படும். எவ்வாறு இருப்பினும் டிசம்பர் மாதம் இரண்டாம் அல்லது மூன்றாம் வாரத்தில் கூடும் பாராளுமன்ற அமர்வுகளுடன் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும். மார்ச் மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும்.
அதன் பின்னர் பொதுத் தேர்தலின் பின்னர் புதிய பாராளுமன்ற அமர்வுகள் கூட்டப்படும், அவ்வாறான நோக்கத்திலேயே அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளது என்றார்.
Post a Comment