Header Ads



தேர்தல் முடிவுகளுக்கு, இஸ்லாமிய வெறுப்பும் காரணமா...?

இலங்கை அதன் அரசியலைப் பொறுத்தவரை ஒருபோதும் தனித் தீவாக இருந்ததில்லை. பொருளாதாரப் பிரச்சனை, 'பயங்கரவாதம் மீதான யுத்தம்', இஸ்லாமிய வெறுப்பு போன்ற உலகலாவிய போக்குகள் இங்கும் தாக்கம் செலுத்தியே வந்திருக்கின்றன.

உலகம் முழுவதும் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்படும் சர்வாதிகார அரசுகள் தோன்றுவதுபோலவே இங்கும் நடக்கிறது. இப்படியான சர்வதேசப் போக்குகள் இலங்கை அரசியலை முன்னகர்த்திச் சென்றாலும் உள்ளூர் பிரச்சனைகளும் அரசியல் பொருளாதாரமும்தான் கடந்த சில ஆண்டுகளாக இங்குள்ள அரசுகளை இயக்குகின்றன.

பல தசாப்தங்களாக உள்நாட்டுப் போர் இலங்கையை கிழித்துப்போட்டிருந்த நிலையில், போருக்குப் பிந்தைய ஆண்டுகளில் மதவாத சக்திகள் நடத்திய முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் சமூகத்தை பிளவுபடுத்தியிருக்கின்றன. உலகம் முழுவதும் நடந்துவரும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின்' ஒரு பகுதி என்ற பெயரில்தான் உள்நாட்டு யுத்தத்திற்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு பெறப்பட்டது. புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஆதிக்க சக்திகள் இஸ்லாமியர்களைப் புதிய எதிரியாகக் கட்டமைத்து, அதன் மூலம் தங்களுக்கான புதிய சமூக அடித்தளத்தை உருவாக்க முயற்சிக்கின்றன.

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி நடந்த ஈஸ்டர் தாக்குதல்கள், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பதத்தை பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பரவலாக்கியிருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு தேசம் முழவதும் பரவியிருந்த அச்சமும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களும் தேசிய அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. வர்த்தக யுத்தமும் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையும், ஈஸ்டர் தாக்குதலால் நிலைகுலைந்திருக்கும் இலங்கைப் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கியிருக்கின்றன. இம்மாதிரியான பாதுகாப்புக் கவலைகள், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றுக்கான தீர்வை பலர் ஒரு வலுவான தலைவரிடம் தேடுகிறார்கள். சமீப காலமாக உலகம் முழுவதுமே ஏற்பட்டிருக்கும் ஒரு போக்கு இது.

இம்மாதிரியான உலகளாவிய சூழல்களால் ராஜபக்ஷ குடும்பத்தினர் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால், தேர்தலில் வெற்றிபெற, அரசியல்ரீதியான அணிதிரட்டலும் தேவைபடும். 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது புலிகள் இயக்கம் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னதையடுத்து, மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெற்றிபெற்றார். இந்த வெற்றி புலிகள் இயக்கத்திற்கு ஒரு தற்கொலையாக முடிந்துபோனது. யுத்தத்தின் பிற்பகுதியின்போது மஹிந்தவின் ஆட்சி அரசையும் சமூகத்தையும் தனக்கு ஆதரவாக ஒன்று திரட்டியது. ஆனாலும் ஜனநாயக சக்திகள் ஒன்று திரண்டு, 2015ல் நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அந்த ஆட்சியைத் தோற்கடித்தது.

தேசிய அளவில் தோற்கடிக்கப்பட்டு, சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ராஜபக்ஷ குடும்பத்தினர், இடைவிடாமல் பணியாற்றினர். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (எஸ்எல்பிபி)என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் துவங்கவும் செய்தனர். சிங்கள கிராமப்புற மக்கள், கீழ் மத்திய தர வர்க்கத்தினரிடம் தொடர்ந்து ஊடாடி, தங்கள் அடிப்படை வாக்குவங்கியை மீண்டும் கட்டமைத்து, அதனை வலுப்படுத்தினர். மோசமாகிவரும் பொருளாதாரச் சூழலாலும் நீண்டகாலம் நீடித்த வறட்சியாலும் அதிருப்தி அடைந்திருந்த மக்களிடம் அவர்கள் உரையாடினர். ராஜபக்ஷ ஆட்சியின் மீது முன்வைக்கப்பட்ட ஊழல் தொடர்பான புகார்கள், அவர்களது பிம்பத்தைக் கடுமையாகப் பாதித்திருந்த நிலையில், அதே போன்ற ஊழல் புகார்களை தற்போதைய அரசு மீது முன்வைத்தனர். நல்லாட்சி தருவதாகக்கூறி ஆட்சிக்குவந்த அரசு, மத்திய வங்கி பிணை முறி ஊழலில் சிக்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினர்.

2018 பிப்ரவரியில் நடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தங்கள் பலத்தைச் சோதித்துப்பார்த்தது ராஜபக்ஷ தரப்பு. அந்தத் தேர்தலில் அவர்கள் புதிதாக உருவாக்கியிருந்த கட்சிக் கட்டமைப்பு, அவர்களுக்கு தென்பகுதித் தொகுதிகளில் மாபெரும் வெற்றியைத் தேடித்தந்திருந்ததால் மிகப் பெரிய நம்பிக்கை அவர்களுக்கு உருவானது.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவற்றின் மூலம் பாராளுமன்றத்தைக் கொதிநிலையிலேயே வைத்திருந்த ராஜபக்ஷ தரப்பு, ஆட்சி நடத்துவதையே மிகச் சிக்கலான காரியமாக்கியது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூலம் மஹிந்தவை பிரதமராக அறிவிக்கச் செய்து, பாராளுமன்றத்தில் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பிற்கும் முயன்றனர். ஆனால் அந்த முயற்சி வெற்றிபெறவில்லை. பாதுகாப்புக் குறைபாடுகள் இல்லையென்றால், கொடூரமான ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுத்திருக்க முடியுமென பிரதமரும் ஜனாதிபதியும் மாற்றிமாற்றி குற்றம்சாட்டிக்கொண்டிருந்த நிலையில், தங்களால் மட்டுமே தேசியப் பாதுகாப்பை நிலைநிறுத்த முடியுமென ராஜபக்ஷே தரப்பினர் திரும்பத் திரும்பக் கூறினர்.

கடந்த நான்கு ஆண்டுகளில் அரசைத் தாக்குதவதற்கான ஒரு வாய்ப்பைக்கூட அவர்கள் விட்டுவிடவில்லை. அதேநேரம், களத்தில் தொடர்ந்து தங்களது தளத்தை உறுதிப்படுத்தியபடியே இருந்தனர். அதிருப்தியில் இருந்த கிராமப்புற சிங்கள மக்கள், ராஜபக்ஷவுக்குக் கீழ் செயல்படுவதில் சௌகர்யமாக உணர்ந்த அதிகாரவர்க்கம், ராஜபக்ஷவின் பொருளாதாரக் கொள்கைகளால் லாபமடைந்த தொழில்துறையினர், மதவாத, சமூக இயக்கங்கள் ஆகியவை இதற்கு உதவின. இந்தக் காரியங்களையெல்லாம் ஒருபக்கம் செய்துகொண்டிருந்தபோது, ஆட்சி மீதிருந்து தங்கள் பார்வையை அகற்றாமல் இருந்தனர் ராஜபக்ஷ குடும்பத்தினர். இப்போது ஜனாதிபதி தேர்தலில் ஜெயித்திருக்கும் நிலையில், நீண்டகால நோக்கில் அவர்களால் அதிகாரத்தை தற்போது திரட்ட முடியும்.

ராஜபக்ஷவுக்குக் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் சிறிசேன - ரணில் அரசின் தோல்வி என்பதுதான் உண்மை. மக்களின் பொருளாதார கவலைகளை பின்தள்ளிவிட்டு, வெளிநாட்டு முதலீடுகளுக்காகவும் வர்த்தக தாராளமயமாக்கத்திற்காகவும் கொண்டுவரப்பட்ட புதிய பொருளாதார திட்டங்களில் கவனம் செலுத்தியது சிறிசேன அரசு. கூட்டணி ஆட்சிக்குள் இருந்த உட்கட்சிப் பூசல்கள் ஒருபுறமிருக்க, அரசியல் தலைமைகளும் மக்களிடமிருந்து விலகியே இருந்தது.

உலகளாவிய வர்த்தக யுத்தம் அதிகரித்துவந்த நிலையில், இவர்கள் தொடர்ந்து தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகத்தைப் பற்றிப்பேசினர். பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் நிலவியபோது, ஈஸ்டர் தாக்குதல் போன்ற மிக மோசமான தாக்குதல் நிகழ அனுமதிக்கும்வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சீர்குலைந்திருந்தன. உலகம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிராக குரல்கள் எழுந்த நிலையில், முஸ்லிம்களை புதிய எதிரிகளாகக் கட்டமைத்து மதவாத சக்திகள் சிங்கள வாக்குகளைத் திரட்டுவதை நிறுத்த அரசு எதுவுமே செய்யவில்லை. இதனால்தான், 2015ல் உருவான மகத்தான தாராளவாத ஜனநாயக பரிசோதனை முயற்சி, ஜனரஞ்சமான சர்வாதிகாரத்தால் வெற்றி கொள்ளப்பட்டது.

ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான தாராளவாதிகள் பொருளாதாரத்தில் கோட்டை விட்டார்கள். மற்றொரு பக்கம், ராணுவமயமாக்கமும் கண்காணிப்பும் நாடு முழுவதும் குறிப்பாக வடக்கிலும் கிழக்கிலும் குறைக்கப்பட்டன. போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. கருத்து சுதந்திரம் ஓரளவுக்குப் பாதுகாக்கப்பட்டது. வடக்கில் ராணுவத்தின் வசம் இருந்த நிலங்கள், உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. நீதித்துறை தன் சுதந்திரத்தைத் திரும்பப் பெற்றது. ஊடகங்களும் சமூக இயக்கங்களும் அரசைக் குற்றம்சாட்டும் தன்னம்பிக்கையைப் பெற்றார்கள். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட்டது. மனித உரிமை கமிஷன், தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆணையம் போன்றவை வலுப்படுத்தப்பட்டன.

ராஜபக்ஷவை எதிர்கொள்ள மக்களின் அரசியல் பொருளாதாரக் கவலைகளுக்கு முகம்கொடுக்கும் ஒரு வலுவான கூட்டணி தேவை. ஆனால் இம்மாதிரி ஒரு கூட்டணியை உருவாக்க, மூன்றாவது சக்தியாக உருவாக நினைக்கும் ஜனதா விமுக்தி பெரமுன அதற்கு உதவாது. தன்னுடைய தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தல் வந்துவிடுமோ எனக் கருதி, தம் கட்சி வேட்பாளரின் வெற்றியையே தடுக்க நினைக்கும் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையும் அதற்கு உதவாது.

தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன?

இந்தப் பின்னணியில் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது பிராந்திய ரீதியாக பிளவுகள் தென்படுகின்றன. தமிழர்களும் முஸ்லிம்களும் பெருமளவில் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்; ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவுதளமாகவும் மலையகத் தமிழர்களும் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ள மத்திய இலங்கை; கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகள் ஆகியவை சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்திருக்கின்றன. ஆனால், மற்ற பகுகதிகளில் உள்ள பெரும்பான்மையினர் கோட்டாபயவுக்கு வாக்களித்துள்ளனர்.

மக்கள் வாக்களித்திருக்கும் விதத்தைவைத்துப் பார்த்தால், நாடு இனம் - தேசியவாதத்தின் அடிப்படையில் பிளவுபட்டிருப்பதுபோல தோன்றும். ஆனால், ஒவ்வொரு பிராந்தியத்தின் அரசியலையும் உற்றுநோக்கி, ஆழமாகப் பார்க்கும்போது வேறுவிதமான புரிதல் கிடைக்கும். வடக்கில் உள்ள தொகுதிகளில் வாக்காளித்தோர் சதவீதம் கடந்த முறையைவிட அதிகமாக இருந்தது. இத்தனைக்கும் எந்த வேட்பாளரும் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்லவில்லை. மற்றொரு பக்கம் தமிழ் தேசியக் குழுக்கள் சில தேர்தலைப் புறக்கணிக்கும்படி அறிக்கை விடுத்திருந்தன.

சஜித் பிரேமதாஸவுக்கு பெருமளவில் வாக்களித்திருப்பதன் மூலம், தேசிய அரசியலுடன் செயல்பட்டு, அதற்கு ஒரு வடிவம் தரும் ஒரு காலத்திற்குள் இப்பகுதிகள் நுழைந்திருக்கின்றன. அதேபோல, சிங்களர்கள் பெரும்பான்மையாகத் திரண்டு, ஒரு பெரும்பான்மைவாத அரசுக்கு வாக்களித்துவிட்டார்கள் என்று சொல்வது எளிதாக இருக்கலாம். ஆனால், உண்மையில், கீழ்த்தட்டு, மத்திய தர வர்க்க மக்கள் பொருளாதார ரீதியாக அடைந்த பாதிப்பு, இளைஞர்களின் நிராசை ஆகியவையே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெரும் எண்ணிக்கையில் வாக்குகளைக் கிடைக்கச் செய்திருக்கின்றன.

அகிலன் கதிர்காமர் அரசியல் பொருளியலாளர்; யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்.

1 comment:

  1. Great article
    You guys like it or not, the heading is 100% True.

    மயில்-மரம் கட்சிகளுக்கு மிக குறைந்த முக்கியத்துவம் கொடுத்திருந்தால், சஜித் இன்னும் அதிக சிங்கள வாக்குக்கள் பெற்றிருப்பார்.
    தமிழர்களுக்கு சஜித் வாக்குறுதிகள் எதுவும் கொடுக்கவும் இல்லை, TNA யுடன் கூட்டும் வைக்கவும் இல்லை. எனவே தமிழர்களால் சஜித் தோட்கவில்லை.

    முஸ்லிம்களும் அரசியல்வாதிகளும் எப்படிதான் மறுத்தாலும், ஈஸ்டர் குண்டுவெடிப்பு, அடிப்படைவாதம், காடழித்து காணிகள் பிடித்தல் என பல குற்றச்சாட்டுகளை மொட்டு அணியினர் கீழ்மட்ட-நடுத்தர சிங்கள மக்களை நம்பவைத்துவிட்டனர்.

    ReplyDelete

Powered by Blogger.