என்னிடம் நேரடியாக கேட்டிருந்தால் மைத்திரிக்கு, முழு மனதுடன் எனது எம்.பி பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்தக்குற்றமும் செய்யவில்லை. என்னைக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளமை சட்ட விரோதமானதாகும்.இந்தத் தீர்மானத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு நான் நீதிமன்றினை நாடுவதற்குத் தீர்மானித்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதென்றால் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீதே நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அவரே தான் தேர்தலில் நடுநிலைமை வகிப்பதாகக் கூறிக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு ஆதரவளித்தார். அதனால் அவர்தான் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்னை கட்சியிலிருந்தும் நீக்கியுள்ளதாக கடிதம் அனுப்பியுள்ளார். நான் கட்சியின் மூத்த உறுப்பினர் கட்சியின் மாதாந்த கட்டணத்தை இதுவரை தொடர்ந்தும் செலுத்தி வருகிறேன். இந்நிலையில் கட்சியிலிருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளேன்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பக்கம் சார்ந்ததாலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாவுக்கு ஆதரவளித்ததனாலுமே எனக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்திருந்தார்கள். ஒழுக்காற்று விசாரணைக்கு வருமாறு என்னை ஒருமுறை அழைத்தார்கள். ஆனால் அந்தத் திகதியில் என்னால் செல்ல முடியாமற்போனது. வேறு திகதியொன்று கேட்டிருந்தேன். எனக்கு வேறு திகதி ஒன்று தரப்பட்டது.
அந்தத் திகதியில் எனது சட்டத்தரணியுடன் ஒழுக்காற்று விசாரணைக்குச் செல்லத் தயாரானபோது கட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு வருமாறு திடீரென அறிவிக்கப்பட்டது. அதற்கு நான் இணங்கவில்லை. பொதுவான இடமொன்றுக்கு வருவதாகத் தெரிவித்தேன். ஆனால் அதன் பின்பு அவர்கள் என்னை வேறுஎங்கும் அழைக்கவில்லை. இது நடந்து ஒரு மாதமிருக்கும். இவ்வாறான நிலையில் என்னை கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் விலக்கியுள்ளார்கள்.
என்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர்களால் நீக்கமுடியாது. அவ்வாறு நீக்கினாலும் நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்வேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்றத்துக்கு அனுமதித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதனை அவர்கள் நேரடியாக என்னிடம் தெரிவித்திருக்கவேண்டும். நான் முழு மனதுடன் எனது எம்.பி பதவியை விட்டுக்கொடுத்திருப்பேன். ஆனால் என் மீது குற்றம் சுமத்தி எதுவும் செய்யமுடியாது. நான் நீதிமன்றம் செல்வேன் என்றார்.
very good move
ReplyDelete