இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின், வாக்கைப்பெற வாக்குறுதிகளை வீசுகின்றனர்
சட்டவிரோத கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று முஸ்லிம்களின் வாக்கைப் பெறுவதற்காக வாக்குறுதிகளை அள்ளி வழங்கி வருவது நகைப்பிற்குரிய விடயமாகும் என ஜே.வி.பி. விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
நீலமும் பச்சையும் மாறி மாறி ஆட்சி செய்தார்கள். அவர்களின் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக பெரும்பான்மை மக்கள் புதிய அரசியல் தலைமையொன்றை எதிர்பார்க்கின்றனர். பிரதான வேட்பாளர்கள் வாக்குறுதி பொதிகளை அள்ளி வழங்கி வருகின்றனர். நாட்டில் ஒழுக்கத்தைக் கட்டியெழுப்ப வரும் வேட்பாளர்களின் கூட்டத்திற்கு வரும் பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர்.
கோட்டாபய வந்தால் வௌ்ளை வேன் மீண்டும் வரும் என்று கூறி வாக்கு பெற முயன்கின்றனர்.கடந்த முறை ஜெனீவா பிரேரணையை காட்டி வாக்குபெற்றார்கள். இனவாதத்தினூடாக தமது வங்குரோத்தை மறைத்து வாக்கு பெற முயல்கின்றனர். நாவலப்பிட்டி முஸ்லிம்களைச் சந்தித்த மஹிந்தானந்த அலுத்கமகே எம்.பி தங்களுக்கு 10 வீதமான முஸ்லிம்களின் வாக்குகளே கிடைக்கும் எனவும் அதனை 25 வீதமாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அவ்வாறு கூடுதலான வாக்குகளைப் பெற்றுத்தந்தால், கண்டி நகரில் முஸ்லிம் பாடசாலை அமைப்பதாகக் கூறியுள்ளார்.
கருத்தடை சத்திர சிகிச்சை, கருத்தடை மருந்து என இனவாதம் பேசியவர்கள் இன்று வாக்கு பெறுவதற்காக வாக்குறுதிகளை வழங்குகின்றனர். சாய்ந்தமருதில் தனி உள்ளூராட்சி சபை பெற்றுத் தருவதாக வாக்களித்து ஆதரவு கோருகின்றனர். இரு பிராதான வேட்பாளர்களும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். 71 வருடங்கள் பிரதான கட்சிகளிடம் ஏமாந்தது போதும் இனியும் ஏமாற வேண்டாம் என்று கோருகிறோம்.
Post a Comment