சகல தவறுகளும் இறுதியில் சஜித் மீது சுமத்தப்பட்டன - மீண்டும் அதிகாரத்துக்கு வருவோம்
எங்களால் விடப்பட்ட தவறுகளை இனம் கண்டுகொண்டுள்ளோம். அவற்றை திருத்திக்கொண்டு மீண்டும் அதிகாரத்துக்கு வருவோம். அத்துடன் தோல்விகளை கண்டு ஒருபோதும் சளைத்துவிடமாட்டோம். கட்சியில் இருந்துகொண்டே எனது அரசியல் நடவடிக்கையை ஆரம்பத்தில் இருந்து கொண்டு செல்லவுள்ளேன் என விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அதிகாரம் என்பது வரும் போகும். அதேபோன்று அமைச்சுக்களுக்கான அமைச்சர்களும் மாறிமாறி நியமிக்கப்படுவார்கள். ஆனால் அரச அதிகாரிகள் தொடர்ந்து அந்த துறையில் பணி செய்யக்கூடியவர்கள். அவர்கள் ஒருபோதும் அரசியல் வாதிகளை திருப்திப்படுத்துவதற்காக தவறான விடயங்களுக்கு துணைபோகக்கூடாது. அவ்வாறான அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும்.
நான் விளையாட்டுத்துறை அமைச்சராக சிறிது காலம்தான் இருந்தேன். என்றாலும் நான் அதிகாரிகளை ஒருபோதும் கேள்விகேட்டதில்லை. மாறாக எனது செயலாளருடன் அனைத்து விடயங்களையும் கேட்டறிந்து, தேவையான வேலைத்திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றேன். அதேபோன்று அதிகாரிகள் யாரும் எனக்கு பந்தம் பிடித்துக்கொண்டு செயற்படவும் இல்லை.
எங்களால் ஏற்பட்ட தவறுகள் காரணமாக தேர்தலில் தோல்வியை சந்திக்க ஏற்பட்டது. எங்களால் ஏற்பட்ட தவறுகளை தற்போது இனம் கண்டுகொண்டுள்ளோம். அந்த தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு முயற்சிப்போம். அரசாங்கத்தினால் விடப்பட்ட தவறுகள் அனைத்தும் இறுதியில் சஜித் பிரேமதாசவின் மீது சுமத்தப்பட்டன. கடந்த ஒரு வருடத்தில் பல சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது. ஆரம்பமாக 52 நாள் அரசியல் நெருக்கடி. அதன் பின்னர் ஏப்ரல் குண்டுத்தாக்குதலுடன் எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான பிரசாரம், அதனைத் தொடர்ந்து எனது தந்தையின் இழப்பு. தற்போது தேர்தல் தோல்வி. என்றாலும் தோல்விகளை கண்டு நான் ஒருபோதும் சளைத்துப்போனதில்லை.
அதனால் மீண்டும் எமது அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிக்க இருக்கின்றோம். சஜித் பிரேமதாசவுடனும் இதுதொடர்பாக கலந்துரையாடினேன். வீடுவீடாக சென்று எமது அரசியல் வேலைத் திட்டங்களை தெளிவுபடுத்தி, புதியதொரு அரசியல் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். அத்துடன் நான் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு செல்லப்போவதாக செய்திகள் பரவி இருக்கின்றன. நான் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியை விட்டு செல்லமாட்டேன். அரச நிறுவனங்களில் அரசியல்வாதிகளின் படங்களை தொங்கவிடக்கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ் தெரிவித்திருக்கின்றார். இதனை நான் வரவேற்கின்றேன். எமது எதிர்வாதியாக இருந்தாலும் நல்லவிடயங்களை ஏற்படுத் தும்போது அதனை பகிரங்கமாக வரவேற்போம். அதற்காக அவர்களுடன் இணைந்து கொள்ளப்போவதாக அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்றார்.
Post a Comment