முஸம்மிலுடைய வெளிநாட்டு, பயணத்தடை நீக்கப்பட்டது
(எம்.எப்.எம்.பஸீர்)
விசாரணைகளை முன்னெடுக்கும் எப்.சி.ஐ.டி. எனப்படும் நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இரு வேறு குற்ற விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடைகள் அதே விசாரணை அதிகாரிகளின் ஆதரவுடன் நேற்று தளர்த்தப்பட்டன.
கோட்டை நீதிவான் நீதிமன்றில் குறித்த விவகாரங்கள் விசாரணைக்கு வந்தபோது அந்த பயணத்தடைகளை நீக்குவதற்கு தாம் எதிர்ப்பில்லை என எப்.சி.ஐ.டி. அதிகாரிகள் மன்றில் தெரிவித்ததை அடுத்து நீதிவான் ரங்க திஸாநாயக்க விடுக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடைகளை தளர்த்தினார்.
அதன்படி தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர ஆகியோரின் வெளிநாட்டுப் பயணத்தடை முழுமையாகவும் மற்றும் பிறிதொரு விவகாரத்தில் வெளிநாட்டுப் பயணத்தடை வழங்கப்பட்ட முன்னாள் சுங்க பணிப்பாளர் நாயகம் ஜகத் பீ. விஜேவீர, சுங்க பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரின் வெளிநாட்டு பயணத் தடைகள் என்பன தற்காலிகமாக தளர்த்தப்பட்டன.
ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை, நம்பிக்கை துரோகம் செய்தமை, மோசடி செய்தமை மற்றும் மோசடிக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டம் மற்றும் கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
இதன்போது இந்த விவகாரத்தில் கைதாகி பிணையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, சரத் வீரவங்ச, ஹேமந்த பெரேரா சேனாரத்ன டி சில்வா ஆகிய சந்தேக நபர்கள் மன்றில் ஆஜராகினர்.
Post a Comment