முஸ்லிம்களுக்கு மங்கள ஆதரவளித்தது, சஜித்தின் தோல்விக்கு காரணமா? அரசியலுக்கு முற்றுப்புள்ளியா..
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து தோல்வியை ஏற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, இன்று உத்தியோகபூர்வ இல்லத்தை ஒப்படைத்து விட்டு நண்பர் ஒருவரின வீட்டில் குடியேறியுள்ளார்.
இனிவரும் காலத்தில் கட்சி அரசியலில் இருந்து விலகி முழு இலங்கை மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் புதிய அரசியல் பயணத்தை ஆரம்பிக்க மங்கள சமரவீர தீர்மானித்துள்ளார்.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக போட்டியிடக் கூடிய, ஐக்கிய தேசிய முன்னணியின் தகுதியான நபர் சஜித் பிரேமதாச என தீர்மானித்து, அதற்காக கட்சிக்குள் போராட்டங்களை நடத்திய மங்கள சமரவீர, தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையான அர்ப்பணிப்புகளை மேற்கொண்டு செயற்பட்டு வந்தார்.
எனினும் தேர்தல் தோல்வியின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மங்கள சமரவீர மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு மங்கள சமரவீரவே பொறுப்புக் கூற வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல, ரவி கருணாநாயக்க மற்றும் தயா கமகே ஆகியோர் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த கூட்டத்தில் மங்கள சமரவீர கலந்துக்கொள்ளவில்லை.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை அடுத்து மங்கள சமரவீர வெளியிட்ட சில கருத்துக்களால், சிங்கள பௌத்த சமூகம் ஆத்திரமடைந்ததாகவும் அது இந்த தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது என முன்னாள் அமைச்சர்கள் குற்றம் சுமத்தியுள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது.
Post a Comment