வெளிநாடுகளில் இருந்து (ஹக்கர்ஸ்) வருகை, குறைந்தளவு கெட்டவருக்கு வாக்களியுங்கள்
(தி.சோபிதன்)
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்யும் உங்கள் அதிகாரத்தை வீணாக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் இரட்ணஜீவன் கூல், வேட்பாளர்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று கருதுவது உங்கள் ஜனநாயக உரிமை. ஆனால் அனைவரும் சமமான அளவு கெட்டவர்கள் என்று கூற முடியாது. அவர்களில் யார் குறைந்தளவான கெட்டவர் என்று கருதுகின்றீர்களோ அவர்களுக்கு வாக்கிடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நல்லூரில் உள்ள யூரோவில் மண்டபத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல் வழிகாட்டல் கருத்தரங்கில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அவர் மேலும் கூறுகையில்;
இந்த தேர்தலில் வாக்களிக்கக் கூடாது என்று கூறுகின்றனர். அது என்னைப் பொறுத்தவரையில் மடமைத்தனம். வாக்களிக்க வேண்டாம் என்று கூறுபவர்கள் வேட்பாளர்கள் அனைவரும் கெட்டவர்கள் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுகின்றனர்.
அனைவரும் சமமான அளவு கெட்டவர்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. சிலபேர் பெரிய கெட்டவர்கள், சிலர் கொஞ்சம் கெட்டவர்கள். நீங்கள் வாக்களிக்காது இருந்தால் பெரிய கெட்டவர் பதவிக்கு வரச் சந்தர்ப்பம் உண்டு.
அதைத் தடுப்பது என்றால் நீங்கள் சென்று யார் குறைந்த கெட்டவர் என்று நினைக்கிறீர்களோ அவர்களுக்கு வாக்கிடுங்கள். அனைவரும் கெட்டவர்கள் என்று நினைப்பது உங்களது ஜனநாயக உரிமை.
உங்கள் வாக்குகளை வீணாக்கக் கூடாது. சிந்தித்துப் பாருங்கள் யாருக்கு வெற்றி பெறச் சந்தர்ப்பம் இருக்கின்றது என்று. வெற்றி பெறச் சந்தர்ப்பம் உள்ளவர்களுக்கு இடையே உங்கள் தெரிவை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தேர்தலில் குழப்பங்களை ஏற்படுத்த வெளிநாடுகளில் இருந்து கணினி நிரல் வல்லுநர்கள் (ஹக்கர்ஸ்) கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அது சாத்தியமா?என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
பத்திரிகை வாயிலாகவே நாங்கள் இதனை அறிந்தோம். அவர்களால் தேர்தலைத் திசை திருப்ப முடியாது என்றே நான் கருதுகின்றேன். அவர்களுக்கு உள்ள ஒரே ஒரு வழி பொய்ப் பரப்புரை செய்வது மட்டுமே. அதனால் மக்கள் யார் சொல்கின்றனர், என்ன சொல்கின்றனர் என்பது தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து “ஹக்கர்ஸ்” வந்துள்ளனர் என்று பத்திரிகை வாயிலாக அறிந்தேன். சில வேட்பாளர்கள் என்னைப் பொறுத்தவரையில் கெட்டவர்கள். அவர்கள் செய்யக் கூடியவர்கள்தான். ஆனால் எனக்கு நேரடியாகத் தெரியாது.
கேள்வி: அவ்வாறு தேர்தல்கள் திணைக்களக் கணினிகள் மீது இணையத் தாக்குதல் நடத்தப்பட்டால் அதை எதிர்கொள்ளும் நிலையில் தேர்தல்கள் திணைக்களம் உள்ளதா?
தேர்தல் முடிவுகள் வரும்போது அவை மூன்று கணினித் தொகுதிகளில் சேமிக்கப்படும். அதை விடவும் கையெழுத்து மூலமான தரவுகளும் பேணப்படும். அதனால் அவர்களால் அவற்றில் தாக்கம் செலுத்த முடியாது என்று நான் கருதுகின்றேன்.
ஆனால் பொய்த் தகவல்கள் மூலம் மக்களைக் குழப்ப முடியும். சமூக வலைத் தளங்கள் மூலம் அவற்றைக் செய்யக் கூடும். ஆனால் அதன் மூலம் தேர்தலைக் குழப்ப முடியும் என்று நான் நினைக்கவில்லை. அதன்மூலம் வாக்காளர்கள் தவறாக வழிநடத்தப்படலாம்.தேர்தல் முடிவு எண்ணிக்கையில் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது.
கேள்வி: இதுவரை தேர்தல் வன்முறைகள் தொடர்பாக எவ்வாறான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன?
எமக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளில் 75 வீதம் முறையற்ற நியமனங்கள் தொடர்பாகவே உள்ளன. அவற்றை நிறுத்தக் கோரிப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நாம் பல நியமனங்களை நிறுத்தியுமுள்ளோம். வன்முறை முறைப்பாடுகள் குறைவாகவே உள்ளன.
ஆனால் மக்களை ஏமாற்றும் முறைப்பாடுகள் அதிகம் கிடைக்கின்றன. உதாரணமாக ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் தமக்கு ஆதரவில்லாத கிராமம் ஒன்றுக்குச் சென்று, அங்குள்ள மக்களுக்கு வாக்கிடும் முறையை தவறாகக் கற்றுக் கொடுப்பது. அதன்மூலம் தமது எதிரணி வேட்பாளரின் வாக்குகளைக் குறைக்க முடியும் என்று சிந்திக்கின்றனர்.
அவ்வாறான குழப்பங்களைச் செய்பவர்களை மக்களுக்குத் தெரியும். குழப்பங்களைச் செய்யாதவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.என்றார்.
Post a Comment