சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் - ரணில் வழிவிட வேண்டும்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை வகிப்பதற்கு சஜித் பிரேமதாச மிகப் பொறுத்தமானவராவார். அவரின் தலைமைத்துவத்தை விரும்பி வாக்களித்த 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பும் இதுவாகவே இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க இதனை புரிந்து கொள்வார் என்று நம்புவதோடு, அவரது ஆசியுடன் சஜித் ஐ.தே.கவின் தலைமை பொறுப்பை ஏற்பார் என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது :
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்த மக்கள், ஆதரவாக செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள், ஏனைய சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை ஜனாதிபதித் தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாகவும், நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தீர்மானிக்கின்ற தேர்தலாகவும் அமைந்திருந்தது. அந்த தேர்தலுக்காக சஜித் பிரேமதாஸவினால் முன்வைக்கப்பட்ட விஞ்ஞாபனத்தை அவருக்கு வாக்களித்தவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது புலனாகின்றது.
தற்போது சிலர் கூறுவதைப் போன்று சஜித் பிரேமதாசவுக்கு எமது தரப்பிற்குள் முழுமையான ஆதரவு கிடைக்காமலிருந்திருக்கலாம். ஆனால் தற்போது கடந்ததைப் பேசி பிரயோசனமில்லை. எனவே 55 இலட்சம் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப சஜித்தின் தலைமைத்துவத்தின் கீழ் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனினும் சிலர் தனித்து பயணிக்க போவதாகக் கூறுகின்றனர். எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. காரணம் 55 இலட்சம் மக்கள் சஜித்தின் தலைமைத்துவத்தை விரும்பியிருக்கிறார்கள். எனவே ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ பதவியை அவருக்கு வழங்குவது மிகப் பொறுத்தமானதாக இருக்கும். ரணில் விக்கிரமசிங்கவும் இதனை புரிந்து கொள்வார் என்று எண்ணுகின்றேன்.
எனவே அவரது ஆசீர்வாதத்துடன் சஜித் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராவார். ஐக்கிய தேசிய கட்சி பிளவு பட வேண்டிய தேவை ஏற்படாது என்றார்.
Post a Comment