சபாநாயகர் பதவிக்கு நான் தயார், மைத்திரியின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் வாபஸ் பெறுவேன்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
சபாநாயகர் பதவிக்கு நான் தயாராகவே இருக்கின்றேன் என்றாலும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை யாராவது பிரேரித்தால் நான் போட்டியில் இருந்து வாபஸ் பெறுவேன் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சபாநாயகர் பதவிக்கு தங்களின் பெயரை பொதுஜன பெரமுன பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படும் செய்திதொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெற்று ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பாராளுமன்றத்தை கலைத்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே நாங்கள் இருக்கின்றோம்.என்றாலும் சட்ட ரீதியில் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்ல இன்னும் மூன்று மாதங்கள்வரை இருக்கின்றன. அதனால் அதுவரை இடைக்கால அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, பிரதமர் மற்றும் அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதான பதவியாக சபாநாயகர் பதவியே காணப்படுகின்றது. சபாநாயகராக என்னை இருக்குமாறு பொதுஜன பெரமுன கட்சி தலைவர்கள் என்னிடம் கேட்டனர். அதற்கு நான் மறுப்பு தெரிவிக்கவில்லை. பாராளுமன்றத்தில் சபாநாயகர் பதவிக்கு எனது பெயர் பிரேரிக்கப்பட்டால் நான் அந்த பதவியை பெற்றுக்கொள்ள தயாராகவே இருக்கின்றேன்.
அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சபாநாயகராக நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
அதுதொடர்பில் எனக்கு உறுதியாக தெரியாது. அவ்வாறு பாராளுமன்றத்தில் எனது பெயரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரும் சபாநாயகர் பதவிக்கு பிரேரிக்கப்பட்டால் நான் அந்த போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுக்கொள்வேன்.
ஏனெனில் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவை நாங்கள் பெற்றுக்கொள்ள இடம்பெற்ற பேச்சுவார்தைகளின்போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு கெளரவமான பதவியொன்று வழங்கப்படவேண்டும் என நானே ஆரம்பத்தில் இருந்து தெரிவித்து வந்தேன்.
தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பதவிகளில் உயர்ந்த பதவியாக சபாநாயகர் பதவி மாத்திரமே இருக்கின்றது. அதனால் அந்த பதவியை மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதே பொருத்தம் என நினைக்கின்றேன். அவ்வாறு இல்லாவிட்டால் சபாநாயகர் பதவிக்கு வர நான் தயாராகவே இருக்கின்றேன் என்றார்.
முதலில் Sri Lanka உருப்பட வேண்டும்,வளர்ச்சி அடைய வேண்டும் எனில்,75 வயதை தாண்டும் அதிக முதியோர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்.இழையோருக்கு வழி விட வேண்டும்.
ReplyDelete