நான் சட்டத்தை மதிக்கும் நபர், ஏனைய சமூகங்களுக்கு எதிரானவன் அல்ல - ஜனாதிபதி கோட்டாபய
தான் சட்டத்தை மதிக்கும் நபர் எனவும் இதனால் தன்னை இனவாதியாக அடையாளப்படுத்துவது முற்றிலும் தவறானது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக இந்தியாவின் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
“ இது கடந்த போர் காலத்தில் ஏற்படுத்திய தவறான புரிதல். நான் 20 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றியுள்ளேன். நான் பயங்கரவாதத்திற்கு எதிராக இராணுவத்தில் இருநது போரிட்டேன். இதன் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்று அமெரிக்காவில் 12 ஆண்டுகள் வாழ்ந்தேன். பின்னர் பாதுகாப்புச் செயலாளராக நாட்டுக்கு வந்தேன். மக்கள் என்னை பாதுகாப்புச் செயலாளர் என்றே அழைத்தனர். இதன் காரணமாக மக்கள் என்னை சர்வாதிகாரியாக நினைக்கக் கூடும்.
நான் சட்டத்தை மதிக்கும் நபர். இதனால் என்னை மற்றைய சமூகத்திற்கு எதிரானவன் என அடையாளப்படுத்த முடியாது. நான் இனவாதி அல்ல என்பதை எனது செயலில் ஒப்புவித்து காட்டியுள்ளேன். நான் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமே சேவையாற்ற மாட்டேன். நாட்டை அபிவிருத்தி செய்யவும், நாட்டை கட்டியெழுப்பவும் என்னுடன் இணைந்து செயற்படுமாறு தமிழ், முஸ்லிம் சமூகங்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். எமது நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
எதிர்க்கட்சி என்னை சர்வாதிகாரியாக காண்பிக்க முடியும். எனது செயல்கள் மூலம் நான் யார் என்பதை மக்கள் கண்டிருக்கலாம். அதேபோலவே என்னுடன் அவர்களை இணையுமாறு கோருகிறேன். குறிப்பாக ஊடகங்கள் பல்வேறு வதந்திகளையும் பொய்ப் பிரசாரங்களையும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
என்னை புரிந்துக்கொள்ள என்னுடன் பேசுங்கள். என்னை சந்தித்து நான் என்ன செய்கிறேன் என்பதை அவர்கள் புரிந்துக்கொள்ள முடியும். இது சம்பந்தமான தெளிவான தோற்றத்தை அவர்களால் மற்றவர்களுக்கு வழங்க முடியும். இது சிறிய நாடு. இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய அவர்கள் எமக்கு உதவ வேண்டும். எனது பயணத்திற்கு தடையாக இருக்காதீர்கள். அதனால் எவருக்கும் எந்த நன்மையும் இல்லை.
குறிப்பாக வதந்திகள் மற்றும் பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என வெளிநாட்டு ஊடகங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். என்னை புரிந்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்னிடம் பேச முடியும். என்னை சந்தித்து நான் என்ன செய்கிறேன். நான் வேலை செய்யும் விதம் பற்றி உண்மையை வழங்குங்கள்” எனவும் கோட்டாபய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, “ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு மீண்டும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்தது பெரிய தவறு. அந்த கொடுக்கல் வாங்கல் தொடர்பாக மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தி நோக்கி செல்லும் பயணத்திற்கான தொடர்பு மாத்திரமே சீனாவுடன் இருந்தது.
எந்த வகையிலும் உலக வல்லரசுகளில் அதிகார போட்டியின் நடுவில் சிக்கும் அவசியம் இலங்கைக்கு இல்லை. பூகோள ரீதியான இலங்கையின் அமைவிடம் மிகவும் முக்கியமானது. ஆசிய பிராந்திய நாடுளுடன் இணைந்து முன்னேற்றத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்ல வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம்.
அத்துடன் இலங்கை, இந்தியாவுடன் எப்போதும் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கும். இந்தியாவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எதனையும் செய்ய எந்த அவசியமும் இல்லை” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment