பொய் பிரசாரம் செய்வதை, அண்ணன் மனோ உடன் நிறுத்த வேண்டும் - நாமல்
காலையில் சேர்ந்து தேநீர் அருந்தியவரைப் பற்றி, மாலையில் இனவாதி என கூறுவது அமைச்சர் மனோ கணேசனிற்கு அரசியலில் சர்வ சாதாரணமாக தெரிவது போன்றதல்ல எனது வட கிழக்கு விஜயம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது மனோ கணேசன் உரையாற்றியிருந்தமை தொடர்பில் நாமல் ராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலியுடன் இருந்த மக்களிற்கு ஆறுதலாக இருந்தேனே தவிர, அவ்விடத்தில் நான் அரசியல் செய்யவில்லை என்பதை அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வளவு காலமும் நாம் நினைத்தது அமைச்சர் மனோ அரசியலில் கோபங்களை வெளிப்படுத்துபவர் என்றுதான், மாறாக அவரது கட்சியில் இருந்த பல அவரின் நெருங்கிய சகாக்கள் எல்லாம் “மனோ பொய் கூறுபவர்” என கூறும் போது நாம் நம்பவில்லை.
ஆனால், நேற்று கிளிநொச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதை நிருபித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
எனது வடக்கு விஜயத்தின் போது நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமக்கு வாக்களிக்காவிட்டால் பரவாயில்லை, சஜித் அல்லாத சிங்கள வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனவோ, ஜே.வி.பிக்கு வாக்களியுங்கள் என்றோ எங்கும் எனது நாவால் கூறவே இல்லை.
அதை விட தேர்தலை புறக்கணியுங்கள் என்று கூறவில்லை. மாறாக வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிக்கை விட்டிருந்தேன். அதனை எமது நாட்டின் சகல ஊடகங்களும் வெளியிட்டிருந்ததை அறியாமல் மக்களை குழப்புவதற்கு கூறாத ஒரு விடயத்தை கூறி பொய் பிரசாரம் செய்வதை அண்ணன் மனோ உடன் நிறுத்த வேண்டும்.
நாங்கள் நடப்பதை கூறி தேர்தல் பிரச்சராரம் செய்கிறோம் நீங்கள் நடக்காததை கூறி தேர்தல் பிரசாரம் செய்கிறீர்கள் அது தான் எமக்கும் உங்களிற்கும் உள்ள வித்தியாசம். கூறாத ஒரு விடயத்தை கூறியதாக கூறி தமிழ் பேசும் மக்களை தயவு செய்து குழப்ப வேண்டாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment