அனைத்து இனமத மக்களையும் ஒன்றிணைக்க, கோத்தபாயவிற்கு ஒத்துழைப்பு வழங்குவேன் - சஜித்
இந்நாட்டின் பிரஜை என்ற வகையில், ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்பை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷவிற்கு நான் தொடர்ந்தும் வழங்குவேன் என்று புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலுள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெற்றது. அந்நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளரினால் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது:
நாட்டின் அனைத்துப் பாகங்களில் இருந்தும் எனக்காக வாக்களித்த அனைத்து மக்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்கள் என்மீது நம்பிக்கை வைத்தமை குறித்து மகிழ்வடைகிறேன். எனது 26 வருட அரசியல் பயணத்தை வலுப்படுத்துவதற்கு உங்களுடைய ஆதரவு பெரும் உறுதுணையாக அமைந்திருந்தது. அதேபோன்று எனது தேர்தல் பிரசாரக்கூட்டங்களில் ஓய்வின்றிப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நானும், எனது குடும்பத்தினரும் உங்களுடைய அர்ப்பணிப்புக்களை ஒருபோதும் மறக்கமாட்டோம்.
எமது நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மிகவும் அமைதியான ஜனாதிபதித் தேர்தலை இம்முறை கண்டிருக்கிறோம். கடந்த ஐந்து வருடகாலமாக வலுப்படுத்தப்பட்ட ஜனநாயகம் மற்றும் சுயாதீன கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பு என்பவற்றின் விளைவே இதுவாகும். அவற்றின் ஊடாகவே சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவை ஸ்திரப்படுத்த முடியுமாக இருந்ததுடன், சட்டத்தின் ஆட்சியும் நிலைநாட்டப்பட்டது.
மேலும் சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கான தலைமைத்துவத்தை வழங்கிய தேர்தல்கள் ஆணையாளருக்கும், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும், இதில் பங்களிப்புச்செய்த அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். ஒருமித்த நாட்டிற்குள் அனைத்து இன,மத மக்களையும் ஒன்றிணைத்து சுபீட்சமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்பை ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள கோத்தபாய ராஜபக் ஷவிற்கு இந்நாட்டின் ஒரு பிரஜை என்ற வகையில் நான் வழங்குவேன் என்றும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
Best of luck...
ReplyDelete