Header Ads



ருவன்வெலிசாயவில் கோத்தாபய, பதவிப் பிரமாணம் செய்தது ஏன்..?


இலங்கை ஜனநாயக சேசலிசக் குடியரசின் 7 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று -18- காலை அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு சென்ற கோத்தாபய ராஜபக்ஷ சற்று முன்னர் ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன முன்னிலையில் ஜனாதிபதியாக சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பௌத்தர்களின் புனித பூமியான சரித்திரம் வாய்ந்த அநுராதபுரம் ருவன்வெலி மகாசாய பௌத்த விஹாரை வளாகத்தில் இந்த பதவி பிரமாண நிகழ்வு முற்பகல் 11.30 மணியளவில் நடைபெற்றது.

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவரும், கோத்தாபய ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷவின் 74 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளுடன் இந்த பதவி பிரமாணம் இடம்பெற்றது.

பதவி பிரமாண நிகழ்வுக்கு முன்னர் கோத்தாபய ராஜபக்ஷ, பௌத்தர்களின் புனித தலங்களான ருவன்வெலி மகாசாய மற்றும் ஸ்ரீமகா போதி ஆகிய விஹாரைகளுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டு தூதுவர்கள், சமயத் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையில் மன்னராட்சிக் காலத்தில் தலைநகரமாக விளங்கிய அநுராதபுரத்தில் இருந்த பௌத்த விஹாரையாக ருவன்வெலி மகாசாய விளங்குகின்றது.

புத்த பெருமான் ஞானம் பெற்றதாக நம்பப்படும் வெள்ளரசு மரம் அநுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி விஹாரையிலேயே உள்ளது.

இந்த ஸ்ரீமகாபோதி மற்றும் ருவன்வெலி மகாசாய ஆகிய விஹாரைகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே காணப்படுகின்ற பின்னணியில், இந்த விஹாரைகள் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் மத்தியில் மிகவும் நம்பிக்கை வைக்கக்கூடிய புனித ஸ்தலங்களாக விளங்குகின்றன.

இந்த விஹாரையுடன் சீமமாலக்க என்ற கட்டிடமொன்று அமைந்துள்ளது. குறித்த கட்டிடத்தின் ஒரு பக்கம் 400 அடி நீளமானதுடன், அதில் ஒரு பக்கத்தில் மாத்திரம் 40 தூண்கள் வரிசையாக அரசர்கள் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கட்டடமானது 1600 தூண்களுடன் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த கட்டிடமாகத் திகழ்கிறது.

ருவன்வெலி மகாசாய பௌத்தர்களின் சின்னமாக விளங்குவது மற்றும் சிங்கள மன்னர்களால் அநுராதபுர யுகம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்ட ஆட்சியாக வரலாற்றில் குறிக்கப்படுவது ஆகிய காரணங்களே தமது பதவிப் பிரமாண நிகழ்வுக்கு இந்த இடத்தை கோத்தாபய தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

அநுராதபுரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் மிகப் பழைமை வாய்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியுள்ளதால், ருவன்வெலி மகாசாயவிலிருந்து பதவிப் பிரமாணம் செய்வது மிக சிறந்த ஆட்சி முறையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையிலேயே  அங்கு பதவி பிரமாண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.