அநுரகுமாரவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி - ஜனாதிபதி கோத்தபாயக்கு வாழ்த்துக்கள்
"எமது வேண்டுகோளை ஏற்று தேசிய மக்கள் சக்தி (NPP)க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்தோடு, இலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கின்ற கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன் இந்நாடு சகல இன மக்களும் சமத்துவமாகவும், சமூக நல்லிணக்கத்துடனும் வாழுகின்ற ,பாதுகாப்பான செழிப்பான நாடாக முன்னேறிச் செல்ல வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்" என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித்தேர்தல் நிறைவடைந்துள்ளதை அடுத்து நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேற்படி ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"எமது வேண்டுகோளை ஏற்று தேசிய மக்கள் சக்தி(NPP)க்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நாம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.அத்துடன் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது, இந்த நாட்டினதும், நாட்டு மக்களினதும் நலனை மாத்திரம் முதன்மை நோக்காக கொண்டு, இன,மத பேதமற்று தன்னுடைய அரசியல் பயணத்தினை முன்னெடுத்து வருகின்ற ஒரு கட்சியாகும். சமூக நீதிக்காகவும், சகல சமூகங்களுக்கு மத்தியிலுமான சகவாழ்விற்காகவும் தொடர்ந்து பாடுபடுவதுடன், ஊழல், மோசடிகளுக்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகின்ற ஒரு கட்சியுமாகும். அந்த வகையில் இத்தேர்தலிலும் முழு நாட்டு மக்களினதும் சமூக ஒற்றுமை, முறையான அபிவிருத்தி, ஊழலற்ற நாடு போன்ற பல குறிக்கோள்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியோடு(NPP) இணைந்து NFGGயாகிய நாம் எமது அரசியல் பணிகளை முன்னெடுத்திருந்தோம். எமது செயற்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும், பொருளாதார ரீதியிலும் பலரும் பங்களிப்புச்செய்திருந்தனர். எனவே எம்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை மேலும் வலுப்படுத்தும் வகையில் எமது சமூகத்திற்காகவும் தேச நலனுக்காகவும் நாம் தொடர்ந்தும் உழைப்போம்.
இத்தேர்தலில் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களினதும் அபிலாஷையாக இருந்த ஒரே விடயம் இந்த நாட்டில் தத்தமது உரிமைகளையும், கலாச்சாரத்தினையும் பாதுகாக்கும் வகையிலான கௌரவமான சமத்துவமிக்க ஒரு ஆட்சிமுறையினை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாகும். அப்போதுதான் எமது நாடு சகல துறைகளிலும் அபிவிருத்தியடைந்த ஒரு செழிப்பான நாடாக மிளிரும் எனவும் மக்கள் நம்பினர்.
இந்த நம்பிக்கையினை மேலும் கட்டியெழுப்பும் வகையில் இனங்களுக்கிடையிலான உண்மையான நம்பிக்கையினையும், சகவாழ்வினையும், ஒற்றுமையினையும், மேம்படுத்தி இனவாத வேற்றுமைகளை இல்லாதொழித்து இந்த நாட்டினை வளர்ச்சிப்பாதைக்கு முன் கொண்டு செல்வதே புதிய ஜனாதிபதியின் இந்த வெற்றியினை மேலும் உறுதி செய்கின்ற விடயமாக அமையும். அதுவே இந்த நாட்டில் உண்மையான பாதுகாப்பான சூழலையும் உருவாக்கும்.
அதே போன்று இந்த நாட்டில் ஊழல் மோசடியினை ஒழித்து நாட்டின் பொருளாதாரத்தினை சாதகமான முறையில் கட்டியெழுப்புவதனூடாக மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்துவதும் புதிய ஜனாதிபதியின் கடமைப்பாடாகும்.
அந்த வகையில் பெரும்பான்மை-சிறுபான்மை என்ற பேதங்களின்றி இலங்கையர் என்ற சமத்துவ உரிமையுடன் அனைவரையும் அரவணைத்து, சட்டத்தின் பாதுகாப்பை அனைவருக்கும் சமமாக உத்தரவாதம் செய்து, அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய செழிப்பான ஒன்றாக நாட்டை முன் கொண்டு செல்ல வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றோம்"
Post a Comment