தயாசிறிக்கு வெட்டு விழுமா...?
கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தமை சம்பந்தமாக கோபத்திற்கு உள்ளாகி இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தயாசிறி ஜயசேகரவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தற்காலிகமாக ஒருவரை நியமிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க கூடாது என என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 90 வீதமான தொகுதி அமைப்பாளர்கள் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த நிலையில், கோத்தபாயவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் மத்திய செயற்குழு என்பன தீர்மானித்தன.
இதனையடுத்து ஜனாதிபதித் தேர்தலில் எவருக்கும் ஆதரவளிக்க போவதில்லை நடு நிலை வகிக்க போவதாக அறிவித்த ஜனாதிபதி, தேர்தல் முடியும் வரை கட்சிக்கு பதில் தலைவராக பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாசவை நியமித்தார்.
இதற்கு அமைய ஜனாதிபதி எந்த தரப்புக்கும் ஆதரவு வழங்காது சுயாதீனமாக செயற்பட்டு வருகிறார். இந்த நிலையில், குருணாகல் ஹெட்டிபொல பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, கோத்தபாயவின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 100க்கு 100 வீதம் ஆதரவாக இருப்பதாக கூறியிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க அல்ல, கட்சி சரியான தீர்மானத்தை எடுத்தது. கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி தொடர்பாக ஜனாதிபதி அடிக்கடி கேட்டு அறிந்து கொள்கிறார் என தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.
எனினும் தயாசிறி ஜயசேகரவின் இந்த கருத்து முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோத்தபாயவின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொள்ளுமாறு தயாசிறி ஜனாதிபதியிடம் கோரியதாகவும் ஜனாதிபதி அதனை நிராகரித்து விட்டதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment