Header Ads



"நமது தனித்தனி வாக்குகள் பற்றி, நாம் ஒவ்வொருவரும் கேட்கப்படுவோம்"

- MAHIBAL M. FASSY - 

இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும்  வழிகாட்டும் ஓர் முழுமையான வாழ்க்கை நெறியாகும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், முஸ்லிம்களும் நீதியை நேசிக்கும் ஏனைய இலங்கையர்களும், நம் நாட்டுத் தலைவரை எதன் அடிப்படையில் நம் வாக்கினைச் செலுத்தி தெரிவு செய்ய வேண்டும் என்பது நம் கவனத்தை ஈர்க்க வேண்டியதாகும்.

வாக்கு, வாக்குறுதி அல்லது சாட்சியம் என்பது இஸ்லாமியப் பார்வையில் ஓர் அமானிதமாகும்.  அமானிதத்தைச் சரியாக நிறைவேற்றுவது பற்றி இஸ்லாம் வலுவாகப் போதித்திருக்கின்றது.  அது பற்றி நாம் கேட்கப்படுவோம் என்று எம்மை நோக்கி  எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றது. 

ஆதலால், நம் முன்னுள்ள வேட்பாளர்களில் அதி பொருத்தமான ஒருவரைத் தெரிவு செய்வது நம் அனைவர் மீதுமுள்ள கடமையாகும். 

"(நன்மையோ, தீமையோ) அது ஒரு கடுகின் வித்து அளவே எடையுள்ளது ஆயினும்; அது கற்பாறைக்குள் இருந்தாலும் அல்லது வானங்களில் இருந்தாலும், அல்லது பூமிக்குள்ளே இருந்தாலும் அல்லாஹ் அதையும் (வெளியே) கொண்டு வருவான்; நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவு மிக்கவன்; (ஒவ்வொன்றின் அந்தரங்கத்தையும்) நன்கறிபவன்."
(அல்குர்ஆன் : 31:16)  

எத்துணை சிறிய செயல்களாயினும் சரியே, நம் செயல்களுக்கான பொறுப்பைப் பற்றி இவ்வாறு எச்சரிக்கும் இறைவன்,  நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் நாம் அளித்து விடப்போகும் வாக்குகள் பற்றி அவன் நிச்சயமாகக் கேட்பான்.

அநீதிக்கு எதிராகப் போராடுவது அறப்போர் என இஸ்லாம் எமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.  

நமக்கெதிராக திட்டமிட்ட  முறையில் தொடர்ந்து  நடாத்திய சதிகளுக்கும் உயிர், உடைமை, உரிமை அழிவுகளுக்கும் தற்போது தமது தேவைக்கேற்றவாறு அவற்றைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கும் கபடத்தனத்துக்கும் எதிராக போராடக்கூடிய ஓர் ஆயுதத்தை நம் கரங்களில் இறைவன் தந்துள்ளான்.

இந்நாட்டில் அதி கூடுதலாக வாழக்கூடிய வறிய மக்களுக்குப் போய்ச்சேர வேண்டிய தேசிய வளங்களை திருட்டுத் தனமாக தம் ஊழல் மூலம் தம் குபேர வாழ்வுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் குற்றவாளிகளான குறுகிய சுயநல ஊழல் வர்க்கத்துக்கு எதிராகப் போராடி நீதியை நிலை நிறுத்தக் கூடிய ஓர் ஒப்பற்ற பொறுப்பை நம் கரங்களில் தந்துள்ளான்.  அதுதான் தேர்தலில் நமக்கான வாக்குகளாகும்.

சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான அராஜகத்தின்போது அதை பகிரங்கமாக எதிர்க்காதது மட்டுமன்றி அத்தகைய இனவாதிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு இப்போது தேர்தலின்போது மட்டும் நம் பாதுகாப்புப் பற்றி வாக்குறுதி தரும் வேட்பாளர்களுக்கு எதிராகப் பாவிப்பதற்கான வேட்டுக்களே அவ்வாக்குகள்.

மறுபுறம், இவ்வணைத்து அநீதிகளின்போதும் அவற்றை உடனுக்குடன் தட்டிக் கேட்டு நாட்டில் சகல மட்டங்களிலும்  நீதியையும் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்பட்ட, செயல்பட்டுக்கொண்டு இருக்கின்ற, எளியோருடன் வாழ்ந்து அவர்களது கஷ்டங்களை உணர்ந்த அந்தத் தேசிய மக்கள் சக்தியின் தலைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தி அவர்களுக்கான அதி உயர் கெளரவமாக நாட்டின் நிர்வாகத்தை அவர்களிடம் அளிப்பதற்கான அரிய வாய்ப்பே இவ்வாக்குகள்.  

இலங்கை வாக்காளர்களும் அரசியலாளர்கள் அனைவரும் இவர்களைத் தெளிவாக இனம் கண்டு வைத்திருக்கின்றனர்.  இருந்தாலும், இவர்கள் மீது குறை காணக்கூடிய ஒரே விடயம் இவர்கள் சொற்பத் தொகையினர் அதனால் வெற்றி பெற மாட்டார்கள் என்பதே.

இந்த இடத்தில்தான், இக்குறையை நிவர்த்தி செய்ய அனைத்து இலங்கையர்களும் ஒன்றுபட்டு,  நீதியையும் அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்ட இத் திசைகாட்டிக்கு தமது ஒட்டுமொத்த வாக்குகளையும் அளித்து இந்நாட்டையும் மக்களையும் சரியான பாதையில் செலுத்த அங்கீகாரம் அளிக்க வேண்டும்.

இறைவனிடம் தமது அணுவத்தனையான அணைத்துக் காரியங்களுக்கும் பொறுப்புக் கூறவேண்டிய ஒவ்வொரு தனி மனிதனும் தம்மை ஈருலகிலும் பாதுகாத்துக்கொள்ள எடுக்க வேண்டிய முடிவு அதுவே.  அப்போதுதான் இறை உதவியை மனிதன் எதிர்பார்க்கலாம்.  சிறு துளிதான் பெரு வெள்ளமாகிறது.  நம் ஒவ்வொருவரினதும் வாக்குகள் பற்றி நாம்  நிச்சயமாகக் கேட்கப்படுவோம். 

பூமியில் நீதியை நிலை நாட்டுவதற்காக தனது பிரதிநிதியாக மனிதனைப் படைத்த இறைவன்  இவ்வாறான சந்தர்ப்பங்களில் நம்மை எவ்வாறு உற்சாகப் படுத்துகின்றான் என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும்:

"நீங்கள் சொற்பங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறையக் கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது."
(அல்குர்ஆன் : 9:41)

தற்போதைய சூழ்நிலையில் 'நம் பொருட்களாக' இங்கு  நாம் எடுத்துக்கொள்ள வேண்டியவை நமது வாக்குகளைத் தான்.  அவை யுத்தகால வாட்களுக்குச் சமனான ஆற்றல் உடையவை.

நமது தனித்தனி வாக்குகள் பற்றியே நாம் ஒவ்வொருவரும் கேட்கப்படுவோம்.  

2 comments:

  1. Emathu vakkuhalai sitharadiththu Gotabaya Rajapakshavai ilahuvaha vettriyadayacheiyanumnu maraimuhamaha sollureenga.ithatku quran aatharam vera

    ReplyDelete
  2. அல்லாஹ்வின் முடிவை அறிவிக்கும் சிலராக மாறி கருத்துகள் தெரிவிக்க வேண்டாம் என்று மிக தாழ்மையுடன் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறேன் எமது கடமை என்ன ? இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது அதிலே மிக தெளிவாக தெரிந்துகொள்ள முடிகிறது கொள்ளை,கொலை,அதிகார துஸ்பிரயோகம் போன்றவற்றை எதிர்க்கும் ஒரு கூட்டு அணி(NPP அனுர) போட்டியில் முனைப்புடன் போட்டியிடுகிறது இன்ஷா அல்லாஹ் இவர்கள்(NPP அனுர) மூலம், அல்லாஹ் சிறு பான்மையினருக்கு ஒரு விமோசனத்தை வைத்திருக்கலாம் என்ற ஒரு எண்ணப்பாட்டை முன்வைத்து முதல் வாக்கை ...........

    ReplyDelete

Powered by Blogger.