Header Ads



வடக்கில் உள்ள 3 வீத முஸ்லிம்களை எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை என நினைக்கின்றீர்களா..?

இந்த நாட்டிலே பெரும்பான்மை இனமான சிங்கள இனம் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி இந்த நாடு சுதந்திரம் அடைந்ததை தொடர்ந்து சுதந்திரத்தின் பின்னர் வருகின்ற அனுகூலங்கள் அனைத்தையும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்து இந்த நாட்டின் சிறுபான்மை மக்களை ஓரம் கட்ட நினைத்தது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில், புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எங்களது தலைவர் அவர்கள் கூறுவார்கள். நாங்கள் மிகவும் கவனமாக செயற்படுகின்றோம். வடக்கு, கிழக்கினை இணைப்பதால் முஸ்லிம்களுக்கு எவ்விதத்திலும் அநியாயம் நடக்க மாட்டாது என்று.

இங்கிருக்கின்ற முஸ்லிம் தலைவர்களை நான் கேட்கின்றேன். வடக்கில் இருக்கின்ற மூன்று வீத முஸ்லிம்களை நீங்கள் கவனிக்கவில்லை. அவர்கள் எக்கேடு கெட்டு போனாலும் போகட்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? அப்படியென்றால் உங்களுடைய சகோதரத்துவம் என்பதனுடைய கருத்து என்ன?

இணைந்த வடகிழக்கிலே நீங்கள் 23 வீதமாக வருகின்றீர்கள். அவ்வாறு வருகின்ற போது வடக்கிலுள்ள முஸ்லிம் சகோதரர்களையும் நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்கள். அவர்களுக்கும் நீங்கள் பலம் கொடுக்கின்றீர்கள். ஆகவே தமிழ் பேசும் இனம் என்ற ரீதியில் இந்த நாட்டில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், இணைந்த வடகிழக்கு என்பது உங்களுக்குமான பாதுகாப்பு என்பதை மறந்து விட்டு வெறும் கிழக்கிஸ்தான் என்று பொய்யான பிரச்சாரம் செய்து வருகின்றீர்கள்.

அவ்வாறு நீங்கள் நினைத்தால் பெருந்தேசியம் உங்களை இல்லாதொழித்துவிடும் என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம். அம்பாறையிலே நீங்கள் ஒருகாலத்தில் பெரும்பான்மையினராக இருந்தீர்கள். ஆனால் அங்கு வந்த பெருந்தேசியம் அம்பாறை என்கின்ற ஒரு பெரும் பரப்பை கபளீகரம் செய்திருக்கின்றது.

நாளடைவில் உங்களுக்கு மேலே இந்த பெருந்தேசியத்தினுடைய செயற்பாடு இருக்கும். ஆகவே அவ்வாறு இல்லாமல் நீங்கள் தப்பிப் பிழைக்க வேண்டும் என்றால் எப்பொழுதும் உரிமைக்காக போராடுகின்ற தமிழர் பக்கம் நீங்கள் இருக்க வேண்டும்.

இந்த மாகாண சபை என்பதை பெற்றுத் தந்தவர்கள் தமிழர்கள். அவ்வாறு அவர்கள் பெற்றுத் தந்த மாகாண சபையை ஆட்சி செய்ய வேண்டும் என நினைக்கின்ற நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்வது தொடர்பில் கேள்விக்குறியை எழுப்புவது எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது.

ஆகவேதான் இணைந்த வடகிழக்கு என்பது எங்களுடை பிறப்புரிமை. அது உங்களுக்கும் சேர்ந்ததுதான் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சார்ந்தவர்கள் நாங்கள் முஸ்லிம்களிடையே தமிழர்களை அடகு வைத்துள்ளோம் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்காக மொட்டிற்கு வாக்களிக்க இருக்கின்றார்கள்.

போர் முடிந்த பின்னர் மகிந்த ராஜபக்ச என்ன கூறினார். ஒரே நாடு, ஒரே மக்கள் என்று கூறினார். அவருடைய அரசியல் தீர்விலே மாகாணங்கள் என்பன இருக்க மாட்டாது. மாகாணங்கள் வெள்ளை யானை என்று கூறுகின்றார்கள்.

மாகாணங்களுக்கு பெரும் செலவு செய்யப்படுகின்றது. எனவே மாகாணங்களை இல்லாதொழிப்போம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருப்பவர்கள் இங்கு வந்து கிழக்கு மாகாணத்திற்கு பிள்ளையானை முதலமைச்சர் ஆக்குவோம் என்று கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களுடைய அரசியல் சித்தாந்தத்திலே மாகாணங்கள் இல்லை. ஆனால் பிள்ளையானை மாகாண சபையினுடைய முதலமைச்சராக ஆக்கப் போகின்றாராம். சட்டத்தை கையிலெடுக்க இந்த நாட்டிலே யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கின்றோம்.

இந்த நாட்டிலே மூன்று இனத்தவர்களும் சேர்ந்துதான் இருக்க வேண்டும். ஆனால் எச்சரிக்கையோடு வாழ வேண்டும். உங்களுக்கு பொய் சொல்கின்றார்கள். நாங்கள் சொல்கின்றோம் முஸ்லிம்களோடு சேர்ந்து வாழ்கின்றோம் என்று, அவர்கள் கூறுகின்றார்கள் முஸ்லிம்கள் தேவையில்லை என்று.

ஆனால் என்ன நடக்கின்றது, கோத்தபாயவின் சட்ட ஆலோசகராக இருக்கின்றார் அலி சப்றி, அவர் யார்..? அவர் ஒரு முஸ்லிம் சகோதரர். பிள்ளையானுடைய ஆலோசகர் யார் அசாத் மௌலான. அவர் தமிழரா? என குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. முஸ்லிம்கள் உங்கள் பேச்சுகளை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் எவ்வளவுதான் கணக்குகள் புள்ளிவிபரங்கள் சொன்னாலும் உங்கள் மீது இருந்த நம்பிக்கை குறைந்து விட்டது. நீங்களும் பேரினவாதிகளோடு இணைந்து எங்களை நசுக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட 70,000 முஸ்லிம்களைப் பற்றி யாரும் ஒன்றுமே சொல்வதில்லை.

    ReplyDelete
  2. விமர்சனம் இருப்பினும் எல்லோரும் வாசித்து இனவாதமில்லாமல் நாகரீகமாக விவாதிக்க வேண்டிய கட்டுரை

    ReplyDelete
  3. ஐயா பெரியவரே! கேடுகெட்ட இந்த மாகாணசபை எதற்காக? அதிகாரப்பூர்வமாக முஸ்லிம்களை அழிப்பதற்காகவா? ஒரேநாடு ஒரேதேசம் என்பதே சாலப்பொருத்தமானது.

    ReplyDelete
  4. புலிகளால் விரட்டபட்ட அனைத்து முஸ்லிம்களையும் 100% ஏற்கனவே வடக்கில குடியமர்த்தபட்டு விட்டார்களே

    ReplyDelete

Powered by Blogger.