சபாநாயகர் கரு முன்வைத்துள்ள 3 தீர்மானங்கள் - ரணிலும், மகிந்தவும் இணங்கினார்களா..??
புதிய ஜனாதிபதி பதவி ஏற்றதன் பின்னர், நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பாக கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றைக் கூட்டி தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்தினால் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிடயம் தொடர்பாக ஏலகே பிரதமர், எதிர்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது மூன்று தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டன.
இதன்படி, நாடாளுமன்றத்தை உத்தியோகபூர்வமாக மார்ச் மாதம் 1ம் திகதியுடன் கலைத்து, பொதுத்தேர்தலை நடத்துவது, அல்லது அதற்கு முன்னதாக நாடாளுமன்றைக் கலைப்பதற்கான 3ல்2 அருதிப் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வது அல்லது தற்போதைய பிரதமர் பதவி விலகி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரையில் புதிய அமைச்சரவையை அமைக்க இடமளிப்பது ஆகிய மூன்று முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த முன்மொழிவுகள் தொடர்பாக பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் தங்களது கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்மானத்தை அறிவித்தவுடன், அடுத்தக் கட்ட நடவடிக்கை தம்மால் எடுக்கப்படும் என்று சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் அடுத்தக்கட்ட செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானிக்கும் இறுதிநிலை கலந்துரையாடல் ஒன்று நாளைய தினம் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் கட்சியாக தொடர்வதா அல்லது எதிர்கட்சியாக மாறுவதா? என்பது தொடர்பாக நாளையக் கூட்டத்தில் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று, ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
Post a Comment