Header Ads



சம்மாந்துறையில் பரீட்சை, மேற்பார்வையாளர்களை தாக்கிய 2 பேர் கைது

- பாறுக் ஷிஹான் -

சம்மாந்துறை தொழினுட்ப கல்லூரிக்கு தொழினுட்ப கல்வி திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய விசேட கடமைக்கு வந்து இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் குழு மீது பரீட்சார்த்தி மாணவர்கள் ஒரு தொகையினர் வெள்ளிக்கிழமை(29) மதியம் சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்ற நிலையில் இருவரை சம்மாந்துறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் வெள்ளிக்கிழமை(29)  நண்பகல் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த தாக்குதலினால் மேற்பார்வையாளர், உதவி மேற்பார்வையாளர்கள் மூவர்  பலத்த காயங்களுக்கு  உள்ளாகி சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

கல்லூரியின் கல்வியாண்டு 2019 இற்கு உரிய மட்டம் - 05, 06 ஐ சேர்ந்த விவசாய டிப்பிளோமா மாணவர்களுக்கு இறுதி தவணை பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன. 

மேற்பார்வையாளர்கள் அனைவரும் மட்டக்களப்பு தொழினுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளர்கள் ஆவர். இதில் ஒரு விரிவுரையாளருக்கு  தலையில் காயங்கள் காணப்பட்டதை அடுத்து  அவரை சத்திர சிகிச்சை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும் மட்டக்களப்பு தொழினுட்ப கல்லூரியை சேர்ந்த மற்றொரு விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு தலையிலும், அக்கரைப்பற்று தொழினுட்ப கல்லூரியை சேர்ந்த விரிவுரையாளரான உதவி மேற்பார்வையாளருக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர கல்லூரியில் பதற்றமும், பாதுகாப்பற்ற சூழலும் ஏற்பட்டதை தொடர்ந்து சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொலிஸார் அழைக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டனர்.

மேலும் பொலிஸார் வைத்தியசாலைக்கு வந்து மூவரின் வாக்குமூலங்களை பதிவு செய்கின்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மேற்பார்வை கடமையில் ஈடுபட முடியாது இருப்பதாக தொழினுட்ப கல்வி திணைக்களத்துக்கு மேற்பார்வையாளர் குழு அறிய கொடுத்து உள்ளது.

இத்தாக்குதலானது பரீட்சையின் போது மாணவர்கள் தாம் மறைத்து வைத்திருந்த சிறு குறிப்புகள் எழுதப்பட்ட துண்டுகளை பார்த்து எழுதுவதற்கு அனுமதிக்காத பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது, ஆத்திரம் கொண்டு மாணவர்களும், அவர்களுடன் வந்த குழுவினரும் சேர்ந்து நடத்திய தாக்குதல் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இது போன்ற கைகலப்பு குறித்த தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பாக சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி நிருவாகம் எந்தவித முறைப்பாட்டை யும் மேற்கொண்டிருக்கவில்லை என்றும்    முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தால்   இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறாமல் தடுத்திருக்கலாம் என்றும் இந்த தாக்குதலுக்கு ஒரு விதத்தில் கல்லூரி நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும் என்றும்  சம்மாந்துறை பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சம்மாந்துறை தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள்  இருவரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த மாணவர்களிடம்  விசாரணைக்ளை மேற்கொண்டும் வருகின்றனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதிப் பரீட்சைகள் கடந்த 25 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.

மொத்தமாக 218 மாணவர்கள் தத்தமது பிரிவுகளுக்கான பரீட்சைகளை எழுதும் நிலையில், அங்கு 12 பரீட்சைக் கண்காணிப்பாளர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வேறு கல்லூரிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுபவர்கள் ஆவர்.

இந்த நிலையில், காலை 9 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக, சில மாணவர்கள் மறைத்து வைத்திருந்த சிறுகுறிப்பு துண்டுகளை பரீட்சை மேற்பார்வையாளர்கள் கைப்பற்றியிருந்தனர்.

ஆயினும், பரீட்சை நடந்து கொண்டிருந்த போது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த காகிதத் துண்டுகளை வெளியில் வைத்துக் கொண்டு, கேள்விகளுக்கான பதில்களை எழுதிக் கொண்டிருந்தாகவும், தாங்கள் அந்த மாணவர் முறைகேடு செய்வதைக் கண்டுபிடித்ததாகவும் பரீட்சை மேற்பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதனை அடுத்து, குறித்த மாணவரை தொடர்ந்தும் பரீட்சை எழுத அனுமதிக்காத மேற்பார்வையாளர்கள், அவரை மண்டபத்திலிருந்து வெளியேற்றினர்.

இதனை அடுத்து, பகல் 12 மணி அளவில் தம்மிடம் வந்து மேற்படி மாணவர் சச்சரவில் ஈடுபட்டதாகவும், பின்னர் அங்கு வந்த சுமார் 30 பேரைக் கொண்ட குழுவினர் தம்மீது தாக்குதல் நடத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் பரீட்சை மேற்பார்வையளர் ஒருவரும், உதவி மேற்பார்வையாளர் இருவரும் காயமடைந்த நிலையில், சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

"எங்கள் மீது அவர்கள் தடிகள் கொண்டு தாக்கினர். நாங்கள் தடுத்த போது, தொடர்ந்தும் அவர்கள் தாக்கினார்கள். அவர்களில் சிலர் தலைக்கவசம் அணிந்து தமது முகத்தை மறைத்திருந்தனர்," என்று, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் உதவி மேற்பார்வையாளர் ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமது திணைக்களத்தின் அனுமதியின்றி தங்களுடைய பெயர் மற்றும் படங்களை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பரீட்சை மேற்பார்வையாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் எம்.எம். ஹசன், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமையை அடுத்து, பாதிக்கப்பட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், பரீட்சைக் கடமையில் ஈடுபடுவதற்கு மேற்பார்வையாளர்கள் தயக்கம் காட்டி வருவதாகவும், திங்கட்கிழமை நடைபெறுவதற்கு அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள பரீட்சையினை நடத்துவது குறித்து தாம் கலந்தாலோசித்து வருவதாகவும், சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் அதிபர் ஹசன் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.