மட்டக்களப்பில் 24 கைக்குண்டுகள் மீட்கப்பட்டு, வெடிக்கவைத்து அழிப்பு
மட்டக்களப்பு காஞ்சரம்குடா வேக்கந்தசேனை வயல் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட 24 கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் இன்று -30- சனிக்கிழமை வெடிக்கவைத்து அழிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர் .
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்ப்பட்ட குறித்த பகுதியில் வயல் பகுதிக்கு அருகில் மண் அகழப்பட்ட நிலையில் உள்ள மண்மேடு ஒன்றில் 24 கைக் குண்டுகள் இருந்துள்ளதை கண்டு அங்கு விவசாய நடவடிக்கைக்கு சென்ற விவசாயிகள் பொலிசாருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, குறித்த பகுதியில் கைவிடப்பட்ட கைக்குண்டுகளை விசேட அதிரடிப்படையினர் பார்வையிட்டு அதனை வெடிக்க வைக்க நீதிமன்ற உத்தரவை பெற்று, 24 கைக்குண்டுகளை மீட்டு வெடிக்கவைத்து அழித்துள்ளனர் .
கடந்த காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதியிலுள்ள மண் மேட்டில் விடுதலைப்புலிகள் புதைத்து வைத்திருக்கலாம் எனவும், குறித்த மண்மேடு மண்அகழ்வின் பின்னர் தற்போது பெய்துவரும் கனமழையினால் மண் அரிக்கப்பட்டு இந்த குண்டுகள் வெளியே தென்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
Post a Comment