100 வருட சியாரத்தை, முஸ்லிம் தீவிரவாத பயிற்சி முகாம் என்கிறது ஹிரு TV
அக்கரைப்பற்றிற்கு தென்புறத்திலுள்ள திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் அமைந்துள்ள பொத்தானையில் - முஸ்லிம் பெரியார் ஒருவரின் சியாரம் - சுமார் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அந்த இடத்தில் இருந்து வருகிறது.
இந்த பிரதேசத்தை சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர் தொல்பொருள் திணைக்களம் அடையாள கட்டைகளை நாட்டி உட்பிரவேசிக்க முடியாமல் விபரமறியாமல் தடுத்தது.
இவ்விடயம் அந்த சியாரத்தை பாராமரித்துவரும் அக்கரைப்பற்றை சேர்ந்தவர்களினால் - ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் இப்பராமரிப்பாளர்களையும் கூட்டிக்கொண்டு தொல்பொருள் திணைக்கள தலைவரை கொழும்பில் சந்தித்து முழு விபரங்களையும் தெளிவுபடுத்தினார்.
இதன் பின்னர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சமய அனுஷ்டானங்களை செய்வதில் தடை இல்லை எனவும் - ஆனால், நிரந்தரமான கட்டிடமோ அல்லது அகழ்தலையோ செய்ய முடியாது எனவும் நிபந்தனை விதித்து - சியாரத்திற்கு செல்வதிலுள்ள தடைகளை நீக்கி வழங்கினார்.
அதன் பின்னர் வழமை போல அங்கு சியாரத்தை தரிசிக்கும் விடயங்கள் - கந்தூரி வைபவங்கள் - திக்ர் மஜ்லிஸ்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 04 மாதங்களுக்கு முன்னரும் ஒரு கந்தூரி வைபவம் இடம்பெற்றது.
இடையில், தற்காலிக கொட்டகை ஒன்று குறிப்பிட்ட இடத்தில் அமைக்கப்பட்டு அதை இனம் தெரியாதவர்கள் உடைத்தெறிந்த விடயமும் - இவ்விடத்தின் தனிப்பட்ட உரிமை சம்மந்தமான விடயமும் - திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடாகவும் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்காகவும் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சுமார் 03 தினங்களுக்கு முன்னர் .............. என்பவரும் இன்னும் சில பிக்குகளும் குறிப்பிட்ட சியாரம் இருந்த இடத்திற்கு சென்றதாகவும் - இவ்விடம் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களின் ஏற்பாட்டில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி வழங்குமிடமாக பயன்படுத்தப்படுவதாக "ஹிரு TV" செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சியாரத்தில் இரவு வேளைகளில் இடம்பெற்ற திக்ர் மஜ்லிஸ்கள் - இரவு நேர பயிற்சிகளாக சித்தரிக்கப்பட்டு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சியாரங்களை தரிசிப்பதையும் பெரியார்களை கண்ணியம் செய்வதையும் தீவிரவாத செயலாக காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு ஹிரு TV யில் காட்டப்பட்ட பின்னணியிலேயே - றஊப் ஹக்கீமை கைது செய்ய வேண்டும் என்ற கோசம் ராவணா பலய அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தலைமையில் நேற்று நடந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்களை பலிக்கடாவாக்கும் நிகழ்ச்சி திட்டம் மிகக்கச்சிதமாக அரங்கேற்றப்பட்ட வண்ணமே இருக்கிறது. கருத்து வேறுபாடுகளுக்கப்பால் அதற்கு பெரியார்களின் கண்ணியமும் சியாரங்களும் கூட பயன்படுத்தப்படுவது மனதை கனக்க வைக்கிறது.
(சியாரத்தின் பழைய படம் இணைக்கப்பட்டுள்ளது)
AL Thavam
Post a Comment