Header Ads



சஜித்திற்கு ஆதரவாக மேடையேறி, விக்டர் ஐவன் ஆற்றிய உரை

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சமூக புரட்சி பற்றி கனவை காண்பதாகவும் அது சிறந்த கனவு எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று -31- நடைபெற்ற சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த சமூக புரட்சியை நாடாளுமன்றத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாது முழு முறைக்கும் சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இலங்கை சமூக மறுசீரமைப்புக்கு அஞ்சும் நாடு. உள்நாட்டு போருக்கு பின்னர் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ள சிறந்த காலமாக இருந்தது. அப்போது அதனை செய்ய முடியாமல் போனது.

இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான தொடர்புகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர், சந்தேகம் மற்றும் அவநம்பிக்கையில் பார்க்கும் நிலைமை காணப்படுகிறது. அரசு, நிறுவன கட்டமைப்புகள் பழுதடைந்த நிலையில் இருக்கின்றது. இவற்றை மாற்றாமல் நாடு ஒரு அடியை கூட முன்நோக்கி வைக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.

ராஜபக்ச ஆட்சியின் பின்னர் அமைந்த அரசாங்கம் பெரியளவில் சமூக மறுசீரமைப்பை மேற்கொள்ளவில்லை.

அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்குவது தொடர்பாக தற்போது பேசப்படுகிறது. நவீன உலகில் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது நாடாளுமன்றத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது.

பிரதிநிதித்துவ ஜனநாயகம் அனைத்து நாடுகளிலும் தோல்வியடைந்துள்ளது. பல புதிய அங்கங்களை பல நாடுகள் இதற்கு சேர்த்து வருகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களை திரும்ப பெறும் உரிமை அப்படியான ஒன்று.

இலங்கையில் சமூக முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை ஏற்பட்டால், முதல் சந்தர்ப்பத்திலேயே இலங்கை பல படிகள் முன்நோக்கி செல்லும்.

இதற்காக பொதுஜன அரசியலமைப்பு தொடர்பாக கனவு காண வேண்டும். அதன் மூலம் குரல் எழுப்ப முடியாத மக்களுக்கு குரலாக மாற பொறுப்பு இருக்கின்றது என்று சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.உலகில் இலங்கையை போல் வீழ்ச்சியுற்ற நாடுகள் பொதுஜன அரசியலமைப்பை உருவாக்கியதன் மூலம் வெற்றிகரமாக முன்னேறியதாகவும் விக்டர் ஐவன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.