Header Ads



நான் தொடர்ந்தும் போராடுவேன் - லசந்தவின் மகள் அறிவிப்பு

முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருமான கோத்தாபய ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் முடிவிற்கு  எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாக  லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

எனது தந்தையின் சார்பில்  நீதிக்காக நீண்ட காலமாக எனது குடும்பம் மேற்கொண்ட போராட்டத்திற்கு கிடைத்துள்ள ஏமாற்றம் தரும் பின்னடைவு இதுவென  அகிம்சா விக்கிரமதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பத்திரிகையாளர்களை படுகொலை செய்தவர்களிற்கு நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதை முடிவி;ற்கு கொண்டுவருவதற்கான இயக்கத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது தந்தை ஒரு சாதாரண பிரஜை அவர் தனது அலுவலகத்திற்கு தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்தவேளை வீதியில் ஈவிரக்கமற்ற விதத்தில் படுகொலை செய்யப்பட்டார் எனவும் அகிம்சா விக்கிரமதுங்க தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ஒருவரின் செய்திக்காக அவரை கொலை செய்வதை அரசநடவடிக்கையாக கருதக்கூடாது என தெரிவித்துள்ள அவர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்புவதை தடுப்பதற்காக நான் தொடர்ந்தும்  போராடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அகிம்சா விக்கிரமதுங்க  முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளருமான கோத்தாபயவிற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கை  அமெரிக்காவின் கலிபோர்னிய நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையிலேயே அவர் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

கோத்தாபய சட்டவிரோத படுகொலைகள் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் சித்திரவதைகள் ஆகியவற்றில் ஈடுபட்டார் என அகிம்சா விக்கிரமதுங்க குற்றம்சாட்டியிருந்தார்.

கோத்தாபய பொதுச்சட்டத்தின்  வெளிநாட்டு அதிகாரிகள் விடுபாட்டுரிமைக்கு தகுதியானவர்  என்ற அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள  சித்திரவதை சட்டவிரோத படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகிய குற்றங்களிற்கு, பொதுசட்ட அதிகாரிகள் விடுபாட்டுரிமையின் கீழ் கோத்தாபய ராஜபக்சவிற்கு விடுபாட்டுரிமை உள்ளதால் அகிம்சா விக்கிரமதுங்கவின் கோரிக்கையை பரிசீலனை செய்வதற்கான  நியாயாதிக்கம் தனக்கு இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வாறன வழக்குகளில்  நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே சித்திரவதைக்கு உட்பட்டவரை பாதுகாக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தது என அகிம்சா விக்கிரமதுங்கவின் சட்டத்தரணி நட்டலி எல் ரீட் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் தங்களிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களிற்கு அப்பால் பத்திரிகையாளர்களை சித்திரவதை கொலை  செய்வது போன்றவற்றில் ஈடுபட்டால் அவர்களிற்கு நீதியின் பிடியிலிருந்து விலக்களிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க பிரஜையான கோத்தாபய ராஜபக்சவை  அமெரிக்க நீதிமன்றங்கள் பொறுப்புக்கூறச்செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.