Header Ads



ஜனாதிபதித் தேர்தல் - இன்று தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இன்று (31) ஆரம்பமாகின்றது. 

காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை அரச அதிகாரிகள் தமது வாக்குகளை அளிக்க முடியும். 

அதன்படி, அரசு நிறுவனங்களின் மற்றும் இராணுவத்தின் தபால் மூல வாக்காளர்கள் இன்று மற்றும் நாளை வாக்களிக்க உள்ளனர். 

மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தபால் வாக்காளர்களின் தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 04 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதற்காக 7,920 வாக்களிப்பு நிலையங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அமைக்கப்பட்டுள்ளன. தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளவர்கள் அவர்களது நிறுவனத்திலே வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

தபால்மூல வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவித்தார். 

தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்றும், நாளையும் வாக்களிக்க முடியாதவர்களுக்கு நவம்பர் மாதம் 7ஆம் திகதி தெரிவத்தாட்சி அலுவலகங்களில் வாக்குகளை செலுத்த முடியும் என சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார். 

வாக்களிப்பு இடம்பெறும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுக்காக சுமார் ஆயிரம் கண்காணிப்பாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். 

அதிவிசேட பாதுகாப்பு கோரப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு மேலதிக பாதுகாப்புகளை வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாகளங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிக்கடி பொலிஸார் ரோந்து நடவடிக்கைளில் ஈடுபடவும் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்

No comments

Powered by Blogger.