Header Ads



தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தபாய உள்ளார், சிறுபான்மையினர் ஒன்றுபட வேண்டும் - சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. இருவரும் கெட்டவர்கள்தான் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்மராட்சியின் தொகுதிக்கிளையினருடனும் வட்டாரக் கிளையினருடனுமான சந்திப்பு முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் எம்.பி. மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

"ஜனாதிபதித் தேர்தலில் நல்லவர் யார், கெட்டவர் யார் என்று நாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடியாது. இருவரும் கெட்டவர்கள்தான். கோத்தபாய ராஜபக்ச ஏற்கனவே கூறிவிட்டார் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தேவையில்லை என்று. சஜித் பிரேமதாஸவுடன் நாம் எமது நிலைப்பாடுகள் தொடர்பில் பேசலாம். எமது இனத்தையே அழித்தவர்கள் ராஜபக்சக்கள். ஆகவே, நாம் நிதானமாகச் செயற்படவேண்டும்.

சிலவேளைகளில் நாம் வெற்றிபெறவேண்டும் என்று நினைக்கின்ற வேட்பாளர் எமது அறிவிப்பால் தோல்வியைத் தழுவலாம். அவ்வாறுதான் தென்னிலங்கையின் நிலைமை உள்ளது. இந்த இடத்தில் நாம் நிதானத்துடனும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.

தென்னிலங்கையின் வெற்றி வேட்பாளராகக் கோத்தபாய உள்ளார். எமது வாக்குகள் பொன்னானவை. தமிழர்கள் என்றில்லாமல் சிறுபான்மையின தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாக ஒருவரைத் தெரிவுசெய்தால்தான் எமது குறிக்கோளை நாம் அடையலாம்.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் 6 கட்சிகளை ஒன்றிணைத்தனர். அதில் ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிக்கும்படி கூறிவிட்டு விலகிவிட்டது. மற்றைய கட்சி ஒன்று ஊடகங்களில் இன்று (நேற்று) ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாம் எந்த வேட்பாளரையும் சுட்டிக்காட்ட முடியாது என்று. அந்தக் கட்சி ஒரு பதியப்படாத கட்சி. அவர்களின் கருத்தைப் பார்த்தால் 35 வேட்பாளருக்கும் தமிழ் மக்களின் வாக்குகள் சிந்தப்படட்டும் என்பதாகும்.

தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக எம்மைத்தான் தெரிந்துள்ளார்கள். வடக்கு, கிழக்கில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எமது கட்சியைச் சார்ந்தவர்கள் 16 பேர். மக்கள் எம்மைத் தெரிந்துள்ளார்கள். அவர்களுக்குப் பொறுப்புடன் கடமையாற்றவேண்டியது எமது கடமை. நாம் எமது முடிவை நிதானமாக சிந்தித்தே அறிவிக்கவேண்டும்.

மைத்திரிபால சிறிசேனவை நாம் கொண்டுவந்து எதுவும் நடைபெறவில்லை என்கின்றார்கள். அது முழுக்க முழுக்கப் பொய். எதுவும் நடைபெறவில்லை என்று கூறமுடியாது. ஏராளமான அபிவிருத்திகள் நடைபெற்றன. பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. பல அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஏன், நாடாளுமன்றம் அரசமைப்புச் சபையாக மாற்றப்பட்டு புதிய அரசமைப்பு நகல் கடந்த ஜனவரி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வாறு பல செயற்பாடுகள் நடைபெற்றன.

இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்கக்கூடிய ஜனாதிபதி வேட்பாளரை நாம் சிந்தித்து உரிய நேரத்தில் அறிவிப்போம்" என்றார்.

2 comments:

  1. தமிழர்கள் இந்த தேர்தலை புறக்கணிப்பதே சிறந்தது

    ReplyDelete
  2. He is a U.N.P.agent,enjoying the privillages,under the pretext of legal adviser to the party

    ReplyDelete

Powered by Blogger.