ஜே.வி.பி.யை வளர்த்தெடுப்பது,, கோடாபயவை ஜனாதிபதியாக்கும் அறிவற்ற கதையா...?
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்குள் வேறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்தாலும் நேரடியாக கோடாபய தரப்பை ஆதரிக்க முடியாத மனநிலையில் அநுரகுமாரவுக்கு ஆதரவாக lobby செய்யும் நிலையில் இருப்பதை புரிந்து கொண்டேன். இதில் முன்னாள் புலி ஆதரவாளர்கள் குறிப்பிடும் படியாக இருப்பதையும் கூற வேண்டும்.
இலங்கையில் உள்ளவர்களில், கிழக்கு மாகாண முன்னாள் புலிகள் கோடாபயவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்து நீண்ட காலமாகவே செயல்படுகிறார்கள். வடக்கிலுள்ள முன்னாள் புலிகள் வெளிப்படையாக கோடாபய ஆதரவு நிலை எடுக்க கூச்சப்படுவதனால் அவர்களும் மெதுவாக அநுரகுமாரவின் மீது பரிவு காட்டும் பரப்புரைகளை மேற்கொள்ள தொடங்கி விட்டார்கள். அதற்கு கவர்ச்சியான காரணங்கள் என நினைத்துக் கொண்டு மோட்டுத்தனமான தர்க்கங்களை முன்வைக்கிறார்கள்.
ஒரு வலுவான மாற்று அரசியல் சக்தி வேண்டுமாம். அதற்காகவே ஜே.வி.பி.யின் அநுரகுமாரவை ஆதரிக்க வேண்டுமாம். ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது இடத்தை பெறும் வேட்பாளர் மூலம் எந்த வகையில் வலுவான மாற்று அரசியல் சக்தியாக மாற முடியும்?
அப்படியானால்,
1982 ல் ரோஹண விஜேவீர மாற்று அரசியல் சக்தியாக மாறியிருக்க முடியுமே!
1999 ல் நந்தன குணதிலக மாற்று அரசியல் சக்தியாக மாறியிருக்க முடியுமே!
ஏன் முடியாமல் போனது?
ஏனெனில், மாற்று அரசியல் சக்தியாக மாறுவதற்குரிய இடம் ஜே.வி.பி.யை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலல்ல. பாராளுமன்ற தேர்தலில்தான் ஜே.வி.பி.பல்லின சமூகங்களையும் இணைத்து அதிக ஆசனங்களை பெற்று மாற்று அரசியல் சக்தியாக மாறுவதற்கான சாத்தியங்களை யோசிக்க வேண்டுமே தவிர, பாராளுமன்றத்துக்கு வெளியில் உள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் மூன்றாம் நிலைக்கு வருவதனால் அல்ல.
ஆனால் இந்த விடயத்தை முதன்மைப் படுத்துவதன் நோக்கம் என்ன?
இந்த தரப்புகள் அனைத்தும் சிறுபான்மை சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்யும் உதிரிகள். தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரதான கட்சிகளும், பொதுவாக மக்களும் பொதுவாக கோடாபயவை விரும்பாத சூழ்நிலையில் அவரை நேரடியாக ஆதரித்து வாக்கு சேகரிப்பது கடினமாகும். எனவே அந்த வாக்குகளை கலைத்து பயனற்றவையாக மாற்றுவதன் மூலம் கோடாபயவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமே காரணமாகும். ரணில் அரசாங்கத்தில் ஜெனீவா விவகாரத்தை கையாள முடியாது என நினைக்கும் புலிகளுக்கு கோடாபய வருவதுதான் மீண்டும் தங்கள் நிலையை புதுப்பிக்கும் வழி.
இதில், இடதுசாரி இன்டலக்சுவல் தரப்பு ஒன்றும், சில மதவாத சக்திகளும் இதே விடயத்தை வேறு விதமாக பேச எத்தனிக்கின்றன.
அதாவது, கோடாபய, சஜித் இருவரும் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள்தான். அவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் முஸ்லிம்களுக்கு ஆபத்துதான். என்பதே அவர்கள் புதிதாக விதைக்கும் கருத்து.
கோடாபய பாதுகாப்பு செயலாளராக நீண்ட காலம் பணி புரிந்தவர். அவரது காலத்தில் இடம்பெற்ற எண்ணற்ற மனித விரோத செயல்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான வன்செயல்களுக்கும் காரணகர்த்தா என குற்றம் சுமத்துகிறார்கள். இந்தக் குற்றப் பின்னணி உள்ள ஒருவரை சஜித்துடன் இணைத்து சமப்படுத்துவது பொருத்தமற்றது.
சஜித் இருபத்தைந்து வருடங்கள் அரசியலில் இருந்தாலும் இது போன்ற சமூக விரோத செயல்களில் அவரை தொடர்பு படுத்த முடியாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறுபான்மைகளுக்கு எதிரான செயல்களில் சஜித் ஈடுபட்டதாக தகவல்கள் இல்லை. அப்படியான போது சஜித்தையும், கோடாபயவையும் ஒரே வகையாக தரப்படுத்துவது உள்நோக்கமுடையது. இங்கு கோடாபயவின் குற்றப் பின்னணியை வெள்ளையடித்தும், சஜித்தின் குற்றங்களற்ற பின்னணியை களங்கப்படுத்தியும் சமப்படுத்தும் வேலை இடம்பெறுகிறது. இதன் மூலம் அநுரவை நோக்கிய அபிமானம் கட்டியெழுப்பப் படுகிறது.
இன்னும் சிலர், அநுரகுமார தமிழர்களுக்கான தீர்வுகளை முன்வைப்பார் என்றும் கூற முற்படுகிறார்கள்.
கடந்த காலங்களில் அநுரவும், ஜே.வி.பி.யும் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் சிங்கள இனவாதிகளுக்கு நிகரான வகையில் எதிர்த்தவர்கள். இப்போதும் அந்தக் கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. ஆனாலும் கோடாபயவுக்கு நிழல் களப்பணி ஆற்றும் வடக்கு புலிகள் அநுரகுமார தீர்வு தருவார் எனும் போலிக்கதைகளை புதிதாக அவிழ்த்து விடுகின்றனர்.
தமிழர் பிரச்சினைக்கு ஐ.தே.க. முன்வைத்த நிஜமான தீர்வு மாகாணசபை. அது இன்று வரை அமுலில் இருக்கிறது. அதைக் கூட வழங்குவதை மனம் இல்லாமல் எதிர்த்தவர்கள்தான் ஜே.வி.பி. அவர்களுக்குள் இருக்கும் தமிழ் விரோத மனப்பாங்கு என்றைக்கும் தீர்வுக்குத் தடையானது.
ஜே.வி.பி.யின் தமிழ் விரோத நிலைக்கும் அநுரகுமாரவின் இனவாத கண்ணோட்டத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டு குமார் குணரட்னம். அவர் 1987 கிளர்ச்சியில் பங்கேற்ற சிரேஸ்ட தலைவர். ரோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக, டி.எம். ஆனந்த, ஹெச்.பி. ஹேரத் போன்ற முன்னணி கிளர்ச்சியாளர்களுக்கு இணையானவர். மலையக தமிழ் பின்னணியைச் சேர்ந்தவர். கிளர்ச்சி காலத்தில் திருகோணமலைக்கு பொறுப்பாக இருந்தவர். தமிழ் போராளிக் குழுக்களுக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் தொடர்பை உருவாக்க முன்னின்றவர். குண்டுவெடிப்பு ஒன்றில் கைதாகி போகம்பர சிறைச்சாலையில் இருந்த போது அங்கிருந்து தப்பி வெளிநாட்டில் தஞ்சமடைந்தவர். சில வருடங்களின் பின்னர் அவர் மீண்டும் இலங்கை வந்து கட்சியில் இணைந்து பணியாற்ற எண்ணினார். தற்போது உள்ளவர்களில் அவர்தான் மூத்த தலைவர். அவருக்கு உயர்ந்த பொறுப்பு வழங்க வேண்டிய அவசியம் இருக்கும். அவர் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பாதவரில் முக்கியமானவர் அநுரகுமார. ஏனெனில் குமார் குணரட்னம் எனும் தமிழ் பெயரில் ஒரு சிரேஸ்ட தலைவர் கட்சியை வழி நடத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இங்குதான் ஜே.வி.பி.யின் இனவாத முகத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கு பல விதமான ஒப்பனைக் கதைகள் மூலம் ஜே.வி.பி. மீது வைக்கப்படும் புகழாரம் யாவும் சிறுபான்மை வாக்குகளை அந்தக் கட்சியின் பக்கம் செலுத்தி வீணடிப்பதன் மூலம் கோடாபயவை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.
அப்படியல்லாமல் இரண்டு பெரும் கட்சிகளுக்கு மாற்றாக ஜே.வி.பி.யை அரசியல் சக்தியாக வளர்த்தெடுக்கத்தான் வேண்டுமென்றால் அதனை பாராளுமன்றத் தேர்தலில் இருந்து தொடங்கலாம். அதற்கு இப்போது கூட்டுச் சேர்ந்திருக்கும் மதவாத சக்திகளும், வடக்குப் புலிகளும், புலம்பெயர் புலிகளும் விரும்புவார்களா? ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும் அதன் பிறகு இவர்களுக்கு ஜே.வி.பி.யுடன் இணைந்து செயல்படும் தேவை இருக்குமோ தெரியவில்லை.
SM Mihad
Post a Comment