ஓடும் ரயிலில் சிலிண்டர் வெடித்து 65 பேர் மரணம் - பாகிஸ்தானில் அதிர்ச்சி
பாகிஸ்தானில் ஓடும் ரயிலில் எரிவாயு சிலிண்டர் வெடித்து சிதிறி பெட்டிகளுடன் பயணிகள் தீயில் எரிந்து சாம்பலான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tezgam என்ற விரைவு ரயில் கராச்சியில் இருந்து ராவல்பிண்டிக்கு சென்று கொண்டிருந்தபோது, பயணிகள் ஏற்றிச் சென்ற எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 65 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.
வெடி விபத்தால் ஏற்பட்ட தீ காரணமாக ரயிலின் மூன்று பெட்டிகள் சாம்பலாகியுள்ளது. மாவட்ட மீட்பு சேவையின் தலைவர் பகீர் உசேன், இறந்தவர்களின் செய்தியை உறுதிப்படுத்தினார். இறந்த உடல்கள் டி.என்.ஏ மூலம் அடையாளம் காணப்படும் என்று கூறினார்.
இறந்தவர்களில் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 17 பேர் அடையாளம் காணப்படவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் ரயில்வே அதிகாரி ஒருவர் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்தினார்.
ரயிலில் பயணிகள் சமைத்துக்கொண்டிருந்த போது இரண்டு சமையல் அடுப்புகள் வெடித்தன. அவர்களிடம் எண்ணெய் இருந்ததால் தீ வேகமாக பரவியது என ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார்.
ரயிலில் இருந்து குதித்ததால் பெரும்பாலான மரணங்கள் நிகழ்ந்தன என்று அவர் கூறினார்.இந்த ரயில் பாதை இரண்டு மணி நேரத்தில் செயல்படும் என தெரிவித்தார்.
மீட்பு பணியில் ராணுவ வீரர்கள், ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ மருத்துவ குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சையை வழங்குவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
Post a Comment