"இறுதிவரை வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாமை, UNP க்குள் உள்ள சாதாரண விடயம்"
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிந்துக்கொள்வதற்கான காலம் ஜனாதிபதிக்கு இன்னும் வரவில்லையென, மத்திய மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
தம்புள்ளை பிரதேசத்தில் இன்று (17) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
தேர்தல் ஆணைக்குழுவானது எதிர்வரும் 12 நாள்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கவுள்ளதாகவும், இந்த நாட்டின் சட்டத்துக்கமைய, தேர்தலை தாமதப்படுத்தும் ஒரே நிறுவனம் உயர்நீதிமன்றமே என்றும் அதனை முன்வைக்கும் தகுதி ஜனாதிபதிக்கே உள்ளதென கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
எனினும் ஜனாதிபதி இதனை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்குக்கு கொண்டு வருவதற்கான அறிகுறியே இல்லாமல் இருப்பதாகத் தெரிவித்த அவர், டிசெம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தி, பொது மக்களின் வாக்குகளால் ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதென்றும் தெரிவித்தார்.
பிரதான கட்சிகளிலிருந்து ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இதுவரை தெரிவு செய்யப்படவில்லை. தேர்தலின் இறுதித் தருணம் வரை வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தாமை ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இன்று நேற்று, இருக்கும் பிரச்சினையில்லையென்றும் அது ஐக்கிய தேசியக் கட்சியில் தொடர்ந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில், உயர்நீதிமன்றத்தின் கருத்தைப் பெற்றால் மாத்திரமே இறுதித் தீர்மானத்துக்கு வரமுடியுமெனவும் இதுவரை ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான தீர்ப்பை உயர்நீதிமன்றமே பெற்றுக்கொடுத்துள்ளதால் அதனை வியாக்கியானத்துக்கு உட்படுத்த உயர்நீதிமன்றத்தால் மாத்திரமே என்றும் தெரிவித்தார்.
Post a Comment