Header Ads



நான் 'இலங்கையன்'

உலகில் மனிதன்  ஒரு சமூகப்பிராணி எனும் வகையில் அவன் ஒருவருக்கிடையில் புரிந்துகொள்வதற்காகவும் இலகுவாக அறிந்துகொள்வதற்காகவுமே இறைவன் மனிதர்களைக் கோத்திரங்களாகவும் பல குழுக்களாகவும் படைத்துள்ளான்.இதனை மனிதன் எப்போது சரியாகப் புரிந்து கொள்கிறானோ அப்போது அவன் உத்தமனாகிவிடுவான்.

அதே நேரம் என்று நான், எனது இனம் மட்டும் வாழ வேண்டும் என்ற குறுகிய எண்ணம் ஒருவனிடம் தோன்றுமோ அவன் மற்ற இனக்குழுவின் உணர்வுகளை மதிக்கவோ அல்லது அவனது உரிமைகளை வழங்கவோ அவன் மனது இடம் தராது.மாறாக எப்போதும் குரோத எண்ணங்களே அவனுள் விதைக்கப்படும்.அவை காலப்போக்கில் இன முரண்பாடு எனும் விருட்சகமாகத் தோற்றம் பெறுகிறது.அதன் பிற்பாடே அவன் அதனை வெளிப்படுத்த தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருப்பான்.ஏதாவது சிறு தவறுகளோ பிழைகளோ மனிதன் எனும் வகையில் ஏற்பட்டாலும் அதனை பெரும் விம்பமாக மக்கள் மத்தியில் சிறு குழு தூண்டும்.விடயம் சரியாகத் தெரியாத அப்பாவி மக்களில் சிற்சிலர் தாம் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக நினைத்து அவர்களுடன் இணைந்து செயற்படத் துவங்குவர்.

அதன் முதற் கட்டம் வெறுப்பூட்டும் பேச்சுக்களாகவோ வேறு நடவடிக்கையாகவோ அமையும்.இதனால் பாதிக்கப்படும் மற்றைய இனக்குழு தம் உரிமைக்காகப் போராடும் போதோ அல்லது அவர்களது செயற்பாடுகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கும் போதோ அவர்களின் உளக் குரோதம் அதிகரிக்கவே அவர்கள் தம்மை நிலைநாட்டிக்கொள்ள எதனையும் செய்யத் துணிந்துவிடுவர்.இது சில வேளை பாரிய உடைமை அல்லது உயிர்        இழப்புகளையே ஏற்படுத்தவல்லது.இது ஒரு நாட்டின் வளர்ச்சியையும் எதிர்கால சந்ததயினரின் வாழ்வையும் கேள்விக்குறியாக்கும்.ஒரு நாட்டின் சிறந்த பிரஜையிடம் எப்போதும் நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிய சிந்தனையே தவிர தன் சுயநலத்துக்காக நாட்டைப்
பின்தள்ளும்  செயற்பாட்டில் ஈடுபடமாட்டான்.

நாம் கண்ணால் காண்பது அனைத்தும் உண்மையாகாது.எந்த ஒரு விடயத்தையும் தீர விசாரணை செய்ய வேண்டும்.எனவே இனங்களிடையே ஏதேனும் முரண்பாடுகள் ஏற்படும்போது ஆக்ரோஷம் கொள்வது  மேலும் முரண்பாடுகளைத் தீவிரப்படுத்தும்.இதனை உரிய முறையில் அணுக வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நிதானப்போக்கைக் கடைபிடிக்க வேண்டும்.குறித்த முரண்பாட்டை மேலும் அதிகரிக்கவும் தம்மை சமூக அக்கறை உள்ளவராகக் காட்டவும் சில
சுயநலவாதிகளால் வதந்திகள் பரப்பப்படவும் வாய்ப்புண்டு.எனவே குறித்த தகவலானது ஊர்ஜிதப்படுத்தப்படாத நிலையில் சமூக வளைத்தளங்களில் பரப்பி மக்களை வீண் அச்சத்திற்கு உள்ளாக்கக் கூடாது.மற்றும் ஒரு தரப்பு தீவிரப் போக்கைக் கடைபிடித்தால் மற்ற தரப்பு சமாதானப் போக்கைக் கடைபிடிப்பதுடன் நாட்டின் நற்பெயருக்குக் கலங்கம் ஏற்படாதவண்ணம் உரியவர்களை அணுகி தீர்வைப் பெற வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் அதிகமான முரண்பாட்டு வலைக்குள் சிக்கும் தீனிகளாக இளைஞர்களையே காண்கின்றோம். இளைஞர்கள் என்போர் உண்மைக்காகவும் உரிமைக்காகவும் போராட எதை வேண்டுமானாலும் செய்யத் துணிபவர்கள்.அத்தோடு அவர்கள் தம் சகபாடிகள் எந்த இனம் என்று பார்ப்பதில்லை.அவர்களுடைய எதிர்பார்ப்பு சிறந்த நட்பு வட்டாரம்தான்.

ஆனால் ஒரு சில சுயநலவாதிகளால் தூண்டப்படும் போது அவர்கள் கொதித்து எழும்புவதுடன் எதிர்காலம் பற்றிய யோசனை இன்றி எதனையும் செய்வர்.இளைஞர்கள் இவ்வாறு சிலரால் தூண்டப்பட்டால் அதன் விளைவு ஆபத்தானது.அதேநேரம் அவர்களுக்கு இன நல்லுறவு பற்றிய தெளிவை வழங்க சமூகம் ஒன்றிணைய வேண்டும்.அப்போது நிச்சயமாக இளைஞர் அதற்கு கைகொடுப்பர்.அத்துடன் அவ்வாறான முரண்பாடுகள் ஏற்படாதிருக்கவும் சிறந்த
தீர்வுகளை முன்வைக்கவும் அவர்களால் முடியும்.

ஒரு நாட்டின் அமைதிக்காகவும் சுதந்திரத்திற்காகவும் இன மதத்திற்கு அப்பால் செயற்பட ஒவ்வொருவரும் உறுதிகொள்ள வேண்டும்.அத்துடன் நாட்டைக்காவு கொள்ளும் எந்தவொரு வெளிச்சக்திகளுக்கும் இடமளிக்கக் கூடாது.ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் நாட்டின் அனைத்துத் துறையையும் முன்னேற்ற முனைய வேண்டும்.உலகின் எப்பாகம் சென்றாலும் உன் இனம் எது என்று கேட்டால் 'இலங்கையன்' என்று பெருமிதத்துடன் சொல்ல வேண்டும்.

நாம் பல சமயங்களைப் பின்பற்றலாம்.அது நமது தனிப்பட்ட தெரிவு. அதற்கும் அப்பால் இலங்கை தேசத்தில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தேசப்பற்றுள்ளவனாக மாற வேண்டும்.ஒரே தாயின் பிள்ளைகளாயினும் அவர்களிடையே பல விடயங்களில் வேற்றுமை உண்டு.இருந்தாலும் அவர்களது சகோதரர்கள் எனும் அடையாளத்தை யாராலும் இல்லாமல் செய்ய முடியாது.

அது போன்றுதான் நாம் எப்படிப் பார்த்தாலும் சமய ரீதியிலான இனப் பாகுபாட்டில் நிச்சயம் வேறுபாடுகளுண்டு.அதற்காக ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை விமர்சிக்கவோ,கேளிக்கைக்குட்படுத்தவோ அவசியமில்லை.ஒரு சமயத்தில் கூறப்பட்ட விடயம் இன்னொரு சமயத்தைப் பின்பற்றுபவருக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம்.ஆனால் அவற்றைத் தொடராக வேற்றுமைக் கண்கொண்டு நோக்கும் போது மேலும் குரோத உணர்வுதான் அதிகரிக்கும்.

மனிதன் எனும் ரீதியில் நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்று அனைவரும் மனப்பூர்வமாக  ஒன்றிணைவதை விட்டும் தடுப்பது எது?அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவை எவை?இன்னும் இன்னும் இனம் இனம் என்று சமயத்தின் வேறுபாட்டைக் காட்டி பிளவுபட்டு நிற்பதா? அல்லது சமயங்களின் வேறுபாட்டை ஏற்று இலங்கையன் என்று ஒன்றுபடுவதா?
ஒவ்வொருவரிடையே உள்ள வித்தியாசங்களை மனம் திறந்து பேசவும் பெருமனம் கொண்டு ஏற்கவும் எம் இதயக்கதவுகளைத் திறக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே சுபீட்சமிக்க இலங்கையை நிச்சயமாகக் கட்டியெழுப்ப முடியும்.

✍Binth Fauzar
#SEUSL

1 comment:

  1. நல்லது நினைக்கும் நல் உள்ளத்துக்கு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete

Powered by Blogger.