கல்முனை மேயரினதும், பிரதேச மக்களினதும் கவனத்திற்கு...!
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட வீதிகளில் வீட்டுக்கழிவுகளை கொட்டுவதால் கட்டாக்காலி மாடுகள் அவற்றை உட்கொள்ள வருவதினால் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுவதாக பாதசாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்முனை மாநகர சபையின் கலாசார மண்டபத்துக்கு முன்னால் பிரதான வீதியின் அருகாமையில் திண்மக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை உட்கொள்வதற்கு கட்டாக்காலி மாடுகள் நாளாந்தம் வருகை தருகின்றன. இதனால் வீதிகளில் பயணிக்கின்றவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இந்தக் கழிவுகளினால் துர்நாற்றம் வீசுவதுடன், மாடுகள் சிலவேளை முண்டியடித்துக் கொள்வதால் வீதி விபத்துகளும் ஏற்படுகின்றன.
கல்முனை பிரதான வீதிகளில் இரவு வேளையில் அதிகமான வீட்டுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. அதனை முறையாக அகற்றுவதற்கு பொருத்தமான எந்த முன்னேற்பாடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
திண்மக்கழிவகற்றும் வாகனங்கள் செல்ல முடியாத வீதிகளில் வசிக்கும் மக்களே வீதிகளில் இதனை கொட்டுவதாக திண்மக்கழிவற்றும் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அவ்வாறான வீதிகளில் வசிக்கும் மக்களின் திண்மக்கழிவுகளை அகற்றுவதற்கு பொருத்தமான நடவடிக்கை மேற்கொண்டால் சூழல் மாசடைதலை தவிர்ப்பதுடன், வீதிகளில் ஏற்படும் விபத்துக்களையும் தவிர்க்க முடியும்.
ஏலவே சாய்ந்தமருது வாசிகசாலைக்கு முன்னால் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு அதன் மூலம் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டனர். அதனை தினகரன் பத்திரிகை அடிக்கடி சுட்டிக்காட்டியதற்கு அமைவாக இன்று அவ்விடத்தில் குப்பைகள் கொட்டப்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment