ஹஜ்ஜுல் அக்பரை விடுவிக்குமாறு இறக்காமம், பிரதேச சபையில் பிரேரணை நிறைவேற்றம்
இலங்கை முஸ்லிம் மதத் தலைவர்கள், புத்திஜீவீகள் மீதான ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணைகளைத் துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்து முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இறக்காமம் பிரதேச சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம்.
கௌரவ தவிசாளர் J. கலீலுர் ரஹ்மான் தலைமையில் இன்று 2019.09.23 ஆம் திகதி திங்கள் கிழமை இடம்பெற்ற இறக்காமம் பிரதேச சபையின் செப்டம்பர் மாதத்திற்கான சபை அமர்வில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கௌரவ உப தவிசாளர் அஷ்ஷெய்க் A.L. நௌபர் (ACMC) அவர்கள் மேற்படி விஷேட பிரேரணையைச் சமர்ப்பித்ததோடு சபையில் பிரசன்னமாகியிருந்த ஏனைய கௌரவ உறுப்பினர்களான MI. நைஸர் (UNP), ML. முஸ்மி (UNP), MS. ஜெமீல் காரியப்பர் (UNP), அஷ்ஷெய்க் ML. சுல்பிகார் (SLFP), T. றபாயிடீன் (SLFP), A. நிர்மலா (UNP), SA. அன்வர் (ACMC), K. பாத்திமா (ACMC) ஆகியோரின் ஏகமனதான சபை அங்கீகாரத்தோடு மேற்படி விஷேட பிரேரணை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப் பிரேரணையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிய சம்பவத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் மதத் தலைவர்கள், புத்திஜீவீீகள் மீதான ஆதார பூர்வமற்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கைதுகளுக்கு எதிராகவும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உடனடியாக நீதியான விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களை விடுவிக்கக் கோரப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2019.08.25 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவால் விசாரணைக்கென அழைக்கப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை ஜமாத் இ இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஷ்தாத் ரஷீட் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் இலங்கையின் மிக முக்கியமான மதிப்புக்குரிய மதத் தலைவரும் மார்க்க அறிஞர்களில் ஒருவருமாவார்.
அவர் இந்நாட்டின் அமைதிக்காகவும் சகவாழ்வை கட்டியெழுப்புவதற்காவும் நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காகவும் மக்களின் சமூக நல சமய ரீதியான மேம்பாட்டிற்காகவும் அரும்சேவைகளையும் அறிவார்ந்த பணிகளையும் தான் சார்ந்த அமைப்பினூடாகவும் தனிப்பட்ட ரீதியிலும் மேற்கொண்டுள்ளதோடு அவர் நாட்டின் சமூக நல்லிணக்கத்திற்காகவும் கடந்த 24 வருடங்களாக மேற்படி அமைப்புக்கு தலைமை தாங்கி பெரும் பாங்காற்றிய ஒருவருமாவார்.
அவரதும் ஏனைய முஸ்லீம் புத்திஜீவீகளது கைதும் முஸ்லிம் சமூகத்தில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதோடு எதிர்காலம் பற்றிய அச்ச உணர்வையும் தோற்றுவித்துள்ளது.
எனவே சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உஷ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்கள் மீதான நீதியானதும் நேர்மையானதுமான விசாரணைகளை உடனடியாக துரிதப்படுத்தி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதோடு இவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஏனைய இஸ்லாமிய அறிஞர்களும் முஸ்லிம் மக்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகம், இஸ்லாமிய அறிஞர்கள், மதத் தலைவர்கள் மீதான மிலேச்சத்தனமான சந்தேகத்திற்கிடமான கைதுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அனைவரது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் குறித்த பிரேரணை
கௌரவ அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
Post a Comment