ஜனாதிபதி தேர்தலில் உணர்வுகளுக்கு முன்,, அறிவியல் ரீதியாக சிந்தித்து வாக்களிப்போம்
- Ibnu Asad -
நல்லாட்சி என்ற பெயரில் மீண்டும் இனக்கலவரங்களும், வேடிக்கைகளும், வீதி ஆர்ப்பாட்டங்களும், இயற்கை அனர்த்தங்களும் என்று கடந்த ஆட்சியை போன்றே எதிர்பார்த்த மாற்றங்களற்ற இவ்வாட்சியின் இறுதித்தருவாயில் உள்ளோம். என்றாலும் கடந்த ஆட்சியை விட ஒப்பீட்டளவில் ஊடக சுதந்திரத்தை அனுபவித்தோம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்நிலையில் நாம் எதிர்வரும் 60 நாட்களுக்குள் 2020 - 2024 காலப்பகுதிக்கான ஜனாதிபதியொருவரை தெரிவு செய்ய வேண்டியுள்ளோம். எனவே கடந்த காலத்தை மீள் பரிசீலனை செய்து, இலங்கையின் தற்போதைய நிலைமைகளை அவதானித்து, உணர்வுகளுக்கு அப்பால் அறிவியல் ரீதியாக பிரச்சினைகளை அணுகி அடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டியுள்ளோம்.
கடந்த காலங்களில் இலங்கையில் அடிக்கடி பதற்றமான நிலைமைகளை அவதானிக்க முடிந்தது. பதற்ற நிலமைக்கான பிரதான காரணம் அரசியல் மற்றும் அதில் கிடைக்கின்ற சுகபோகங்களாகும். இதனை அனுபவிக்க கையாள்கின்ற பிரதான ஆயுதம் இனவாதமாகும். இதனால் இலங்கையை பொறுத்தவரை மனித வாழ்வுக்கு அச்சுறுத்தலாக கடந்த காலங்களில் இனவாத பிரச்சினைகள் அமைந்தது. என்றாலும் தேர்தல் காலம் என்பதால் தற்போதில்லை.
இலங்கை தற்போது உலக நாடுகளிடம் கடன் பெற்றாலும் சுதந்திரத்திற்கு முன் சிறந்த நிதிப் பலமுள்ள நாடாகும். இங்கு சமூக சேவை செய்யனும் என்று பலர் ஆர்வத்துடன் அரசியலில் ஈடுபட்டாலும் அதில் கிடைக்கும் தனிப்பட்ட வருமானங்களால் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏற்படும் எண்ணமே அடுத்த தலைமுறையினரின் இருப்புக்கு முன், தான் அடுத்த தேர்தலுக்கு பின்னாலும் அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. இது அரசியலில் கிடைத்த சுக வாழ்வின் விளைவாகும். எனவே முதலில் அரசியல் ரீதியாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசியல்வாதிக்கு வழங்கும் சுகபோகங்களை குறைக்க வேண்டும்.
இலங்கையை பொறுத்தவரையில் பொதுமக்கள் குறுங்கால சிந்தனையுடையவர்களாகவும், அதிக மதம் சார்ந்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவர்களாகவும் உள்ளனர். எனவே ஒவ்வொரு அரசியல்வாதியும் பொதுமக்களிடம் உள்ள இந்த பலவீனத்தை பயன்படுத்தி வாக்குகளை பெற்று அரசியலுக்கு வந்து சுகபோகம் அனுபவிக்கின்றனர். அடுத்தாக தேர்தல் நெருங்கும் போது பொதுமக்களுக்கு சேவை செய்யாத அரசியல்வாதி தான் ஒரு செயல் வீரன் எனக் காட்ட தன் சார்ந்த வேலையில்லாத இளைஞர்களை கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினை உருவாக்கி விடுகின்றனர். அடுத்த கட்டமாக அதனை நிவர்த்தி செய்ய களத்தில் இறங்கும் குறித்த அரசியல்வாதி சந்தர்பத்துற்கேற்ப உணர்ச்சி வசப்பட பேசி பொதுமக்களின் வாக்குகளை பெற்று மீண்டும் அரசியலில் நுழைகின்றனர். மேற்படி அரசியல் சார்ந்த பாதுகாப்பின்மையை நிவர்த்தி செய்து பொதுமக்களுக்கு அரசியல் ரீதியான பாதுகாப்பை உருவாக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.
இலங்கை பொருளாதாரமானது அரசியல்வாதிக்கும் கட்சிக்கும் ஏற்ப மாறுபடும் பொருளாதாரக் கொள்கையாகும். இலங்கையில் நிலையானதொரு பொருளாதாரக் கொள்கை காணப்படுவதில்லை. இலங்கையின் பொருளாதார ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு போன்றுள்ளது. அதாவது கொழும்பு நகரில் 5 கோடி பெறுமதியான சொந்த அடுக்குமாடிகளில் 45,000.00 மாதந்த சேவைக்கட்டணம் செலுத்தி வாழ்வோறும் உள்ளனர். மாதாந்தம் வீட்டு வாடகை 5,000.00 செலுத்த திண்டாடுவோரும் உள்ளனர்.
இலங்கை பொதுமக்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். இதற்கு மாற்றமாக நாம் அறிவியலுக்கு முக்கியத்துவம் வழங்கினால்தான் நமது நாட்டை அபிவிருத்தி அடையச் செய்யலாம். அண்மையில் நாட்டை அதிர்ச்சியடையச் செய்த விடயம்தான் “முஸ்லிம் டாக்டர் ஒருவர் 4,000 சிங்கள தாய்மார்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டார்” என்ற செய்தியாகும். இலங்கையர் உணர்வுக்கும், மதத்திற்கும் முக்கியத்துவம் வழங்குகின்றனர். இதனால் தான் இங்கு தலைப்பிலே இரு மதங்களின் பெயர் குறிப்பிட்டுள்ளது. அடுத்ததாக அறிவியல் ரீதியாக சிந்தித்தல் என்றால் இதுதான், குறைந்தது ஒரு நாளைக்கு இருவருக்கு சிகிச்சை செய்தால், இந்த சிகிச்சைக்கு 2,000 நாட்கள் அல்லது 6 வருடங்கள் தேவையாகின்றது. அது மாத்திரமன்றி மருத்துவ ரீதியாக வளர்ச்சியுற்ற நாடுகளிலும் ஒரு சிகிச்சைக்கு குறைந்தது இரண்டு பேர் தேவைப்படும் நிலையில் இலங்கையில் தனியொருவரால் இந்த சத்திர சிகிச்சை சாத்தியமா?
பொதுமக்களே! இவ்வாறு உங்கள் உணர்வுகளை மூலதனமாக கொண்டு பலர் ஆட்சி செய்யும் நாடு இலங்கை. எனவே உணர்வுகளுக்கு முன்னால் பிரச்சினையின் போது அறிவியலுக்கு முதலிடம் வழங்கி இலங்கையை முன்னேற்ற முயற்சிப்போம்.
நாம் தற்போது இன்னொரு ஜனாதிபதித் தேர்தலை எதிர்நோக்கியுள்ளோம். இந்நிலையில் மீண்டும் அதே பழைய அரசியல்வாதிகள்தான் உங்கள் உணர்வுகளைத்தூண்டி வாக்குகளை கொள்ளையிட வருகை தரவுள்ளனர்.
அதற்கு முன்னால் நாம் தேர்தல் என்றால் என்ன? இதனால் அடைய வேண்டிய இலக்குகள் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தேர்தல் என்பது செய்த சேவைகளுக்கும், வழங்கிய வெகுமதிகளுக்கும் செலுத்தும் நன்றிக் கடனல்ல, தலையிடிக்கு மாற்றும் தலையணையுமல்ல, வெட்டினாலும் பச்சை என மாறதிருப்பதுமல்ல. மாறாக எதிர்காலத்தில் சேவைகள் செய்ய வழங்கும் பொதுமக்களின் அனுமதியாகும்.
அவ்வகையில் நாம் ஓர் அரசொன்றை (ஜனாதிபதி, பிரதமர், பாராளுமன்றம்) அமைப்பதினூடாக அடைய எதிர்பார்க்கும் இலக்குகள், உள்ள பிரச்சினைகள் மற்றும் தீர்வுகளை இனங்காண வேண்டும்.
நிலைத்து நிற்கும் அபிவிருத்தி, நிறை தொழில் மட்டம், பொருளாதார ஏற்றத்தாழ்வை குறைத்தல், தனிமனித சுதந்திரம், கல்வி அபிவிருத்தி, பணவீக்கத்தை கட்டுப்படுத்தல் அல்லது 6% இதற்குள் பேணுதல், மதக் கலாசார சுதந்திரம், ஐக்கியம், இன மத பேதமின்றி நீதியை நிலைநாட்டுதல் என்பன ஓர் அரசாங்கத்தின் இலக்குகளாகும்.
சிறுபான்மை மக்களின் இன மத கலாசார பூரண சுதந்திரமின்மை. வேலையில்லா பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள், ஆண்டுதோறும் மலை போல ஏறும் வெளிநாட்டுக் கடன். உள் நாட்டு சந்தையில் தமது விவசாய உற்பத்திகளை விற்பனை செய்ய அல்லல்படும் விவசாயிகள., நிலைத்து நிற்கும் அபிவிருத்திக்கு பதிலாக சுற்றுலாத்துறையை மாத்திரம் இலக்காக கொண்ட திட்டம் அதிலும் அதிர்ச்சியான விடயம்தான் காடுகளை அழித்து வெளிநாட்டு பயணிகளுக்காக விடுதி அமைக்கும் நாட்டில், உள்நாட்டு பிரஜைக்கு தன் சொந்த காணியிலும் குடிசை அமைக்கவும் விடுவதில்லை, காடெனக் கூறி. இலங்கையின் நீர்வள முகாமைத்துவத்திற்கு எடுத்துக்காட்டாய் யோத கால்வாய் அமைத்த நாடுதான் இன்று வடக்கு வரட்சியினால் வாடும் போது தெற்கு வெள்ளத்தினால் மூழ்கும் நிலையில் உள்ளது. அரச தொழில் என்றால் திறமைக்கு பதிலாக அமைச்சர்களின் அடிவருடியாக இருக்க வேண்டிய நிலை. ஒவ்வொரு செயற்திட்டங்களிலும் தரகு, ஊழல் மோசடிகள் என எமது நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை பட்டியலிடலாம்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் நாடென்ற அடிப்படையில் ஒர் அரசாங்கத்தின் இலக்குகளும், தற்போதைய சூழ்நிலையில் இலங்கையில் இனங்காணப்பட்ட பிரச்சினைகளாகும். மேற்படி பிரச்சினைகளில் இனவாதம் சார்ந்த பிரச்சினைகள் தேர்தல், ஆட்சி என்பவற்றை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படுகின்ற பிரச்சினை என்பது கசப்பான உண்மையாகும்.
எனவே நாம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் மேற்குறித்த இலக்குகளை அடைவதுடன் பிரச்சினைகளைத் தீர்த்தல் என்ற உயரிய நோக்கத்துடன் வாக்களிக்க வேண்டும். ஆனால் நாம் கடந்த காலங்களில் ஏன் வாக்களித்தோம். என்பதை மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும்.
கிடைத்த வீடுகளுக்கும், உணவுப் பொதிகளுக்கும், மது போத்தல்களுக்கும், உள் வீதிப் புணரமைப்புகளுக்கும், தொழிலுக்கும் நன்றிக்கடன் செலுத்தும் விதமாகவும், நாம் இந்த ஆட்சியில் தான் அடிபட்டோம் எனவே அடுத்த ஆட்சிதான் நல்லது என தலையிடிக்கு மாற்றும் தலையணை போல் வாக்களித்து வந்தோம்.
மறுபுறம் கிராமிய வழக்கில் தேர்தல் காலங்களில் “வெட்டினாலும் பச்சை” என்ற சொல்லாடலை அவதானிக்கலாம். அதாவது நாடு, சமூகத்தில் எது நடந்தாலும் என்றும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் அவலநிலையாகும்.
ஆனால் தேர்தல் என்பது இதுவல்ல. எனவே நன்றிக் கடனாகவும், விடாப்பிடியாகவும், மாற்றுத் தீர்வு மறு கட்சி என்றும் வாக்களிக்கும் கலாசாரத்திலிருந்து மீள வேண்டும்.
அரசாங்கம் அல்லது நாட்டின் இலக்குகளை அடைவதற்கும், இங்கு தீர்க்கப்பட வேண்டிய உங்கள் உணர்வுகளைத் தூண்டிக் கொண்டிருக்கும் இனவாத பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை பெறுவதற்கும் பொருத்தமான ஒருவரை தெரிவு செய்து அவருக்கு பொறுப்புக்களை கையளிப்பதுடன் அவற்றை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் வழங்குதலுமே தேர்தலாகும்.
அவ்வகையில் தாம் தமது நாட்டின் இலக்குகளை அடைவதற்கும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் சிறந்ததோர் தலைவரிடம் தமது ஜனாதிபதிப் பொறுப்பை கையளிக்க வேண்டும். அவ்வாறே பாராளுமன்றத்தையும் சிறந்ததோர் தலைமைத்துவ குழுவிடம் கையளிக்க வேண்டும். ஏனெனில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களை நல்லாட்சியில் அடைந்து கொள்ள முடியாமைக்கான பிரதான காரணம் தலைவரிடம் மற்றும் தலைமைத்துவத்துவத்திடம் எதிர்பார்த்த தலைமைத்துவ ஆளுமின்மையாகும். இதற்கு நாம் கடந்து வந்த 52 நாள் ஆட்சி சிறந்த சான்றாகும்.
அவ்வகையில் சிறந்த தலைமைத்துவ பண்புகளான நேர்மை மற்றும் நாணயம், நம்பகத்தன்மை, தூரநோக்கத்துடன் திட்டமிட்டு தீர்மானமெடுக்கின்ற, உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்களுடன் சிறந்த தொடர்பாடற் திறன் மற்றும் சிறந்த பேச்சாளுமையுள்ள, பாரளுமன்ற உறுப்பினர்களுற்பட நாட்டு மக்களையும் ஊக்குவிக்கின்ற, உச்ச வினைதிறனுடன், பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும், அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வதுடன், அவருடன் குழுவாகவும், விட்டுக் கொடுப்புடன் செயற்படுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் தெரிவு செய்ய வேண்டும்.
எனவே தற்போது களத்தில் இறங்கியுள்ள ஏற்கனவே அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத வேட்பாளர்களுல் யார் சிறந்த ஆளுமையுள்ளவர், பொறுப்புணர்வுடன் கடமைகளை சரியாக நிறைவேற்றுவார் என்பதை உங்கள் உணர்வுகளுக்கு அப்பால் அறிவியல் ரீதியாகவும் சிந்தித்து வாக்களியுங்கள்.
Vettinal neelam illaya???
ReplyDelete