சமூக ஆர்வலர் ரவுப் (சீனிக் காக்கா)
யாழ்ப்பாணம், சோனகத் தெருவைச் சேர்ந்த முஹிதீன் பிச்சை – ஆயிஷா உம்மா தம்பதியினருக்கு ஏழு பிள்ளைகளுள் நான்காவதாக 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி மொஹமட் ரவுப் மகனாக பிறந்தார். (சகோதரர்களாக பதுறுஸமான், அப்துல் அஸீஸ், சகோதரிகளாக சித்தி ஸாலிஹா, ஐஸ்மினா, ஐலீஸா, சம்ஸுனா.)
ரவுப் ஆரம்பக் கல்வியை யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.ஒஸ்மானியா கல்லூரியி;லும் கற்றார். ஒஸ்மானியா கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் வருடாந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு ஓட்டப்போட்டி, அஞ்சல் ஓட்டப் போட்டி, மரதன் போன்ற மெய்வல்லுநர் போட்டிகளில் கலந்து, கூடுதலாக முதலிடம் பெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இவர் வெல்டிங் வேலையில் விருப்பம் கொண்டதால் மேற்படிப்பு படிக்கவில்லை. சிறிது காலம் வெல்டிங் தொழிலில் ஈடுபட்டார். வெல்டிங் வேலையை கைவிட்டுவிட்டு சோனகத் தெருவில் பலசரக்கு கடை நடாத்தி வந்தார்.
இவர் இளம் வயதில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியோடு தன்னை இணைத்துக் கொண்டு தீவிரமாக உழைத்தவர். சோனகத்தெருவில் ஏற்படும் பிரச்சினைகளை முன்னின்று குரல் கொடுக்கக் கூடியவராக விளங்கினார்.
சீன கம்யூனிட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்ட ரவூப் 1980 களில் சுபியான் மௌலவியால் ஆரம்பிக்கப்பட்ட ஜமாஅதே இஸ்லாமி பயிற்சி மன்றத்தில் இணைந்து கொண்டார். 'இஸ்லாம் ஒரு வாழ்க்கைத்திட்டம்' என்ற விளக்கங்களினால் ஈர்க்கப்பட்hர்.
யாழ் சோனகத் தெருவில் சுபியான் மௌலவியால் 1980 இல் ஆரம்பிக்கப்பட்ட கூட்டு ஸகாத் முறைமையை நடைமுறைப்படுத்துவதில் ரவூப் தன்னை முழுமையாக ஈடுபடுத்தினார் என்பது முக்கியமான விடயமாகும். மேலும் யாழ்.சோனகத் தெருவில் ஓர் இஸ்லாமிய கலாசாலையை உருவாக்குவதிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்பட்டார்.
1980களில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் காயமடைந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு முதலுதவி செய்யும் நோக்கில் அக்கலாசாலை கட்டிடத்தை முதலுதவி சிகிச்சை நிலையமாக பயன்படுத்துவதில் ரவூப் தீவிரமாக செயற்பட்டது அனைத்து முஸ்லிம்களினதும் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார்.
யுத்தம் முடிவடைந்ததும் மீள் குடியேற்றத்தின் போது 1990 இல் கைவிடப்பட்ட இல்லாமிய கலாசாலை கட்டிடத்தை திருத்தி 'ஸலாமிய்யா இஸ்லாமிய கலாசாலையை ஆரம்பித்து வைப்பதில் பெரும் பங்காற்றினார்.
கிளிநொச்சியில் மர்ஹூம் எம்.எம் மக்பூல் டி.ஆர்.ஓ. ஆக இருந்த காலத்தில் ரவுப்புக்கும் விஸ்வமடுவில் 2 ஏக்கர் காணி கிடைத்தது. மேலும் 8 ஏகக்ர் காணி விலைக்கெடுத்து 10 ஏக்கரிலும் மிளகாய், வெங்காயம், பயிர்ச் செய்கையிலும் இடம்பெயரும் வரை ஈடுபட்டார். இவர் ஒரு நல்ல உழைப்பாளி.
இவர் 15.11.1989 இல் சுல்தான் முஹிதீன்- சபியா தம்பதியினரின் மகள் றபீலாவை திருமணம் முடித்தார். ரவூப் - றபீலா தம்பதியினருக்கு இரண்டு பெண்பிள்ளைகள் உண்டு (பாத்திமா நுஸ்லா, சமீரா)
சமூக ஆர்வலரான ரவூப் 15.09.2019 இல் தனது 69 வயது கடந்த நிலையில் இறையடி எய்தினார்.
'இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்'
இவர் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை அடைய அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.
Post a Comment