"கோத்தாபயவுக்கு எதிராக சில்லறை, பிரச்சினைகளை முன்வைக்கிறார்கள்"
கோத்தாபய ராஜபக்ஷ வெற்றிபெறுவதை தடுக்க முடியாமல் சில்லறை பிரச்சினைகளை முன்வைத்து அவர் போட்டியிடுவதை தடுக்க சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றது.
அத்துடன் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் சிறுபான்மை மக்களை எமது பங்காளிகளாகவே வைத்துக்கொள்வோம்.
அதன் மூலமே நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாயக்கார தெரிவித்தார்.
சோசலிக மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றி நிச்சயமாகும்.
அதனை தடுக்க முடியாமல் தற்போது அவருக்கு எதிராக அவரின் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு போன்ற சில்லரை பிரச்சினைகளை ஏற்படுத்தி அவரை போட்டியிடாமல் தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக செயற்படும் சிவில் அமைப்புக்களே இதனை மேற்கொண்டு வருகின்றன.
அத்துடன் ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதற்கு ஒருவரின் தேசிய அடையாள அட்டையோ வெளிநாட்டு கடவுச்சீட்டோ தேவையில்லை. குறிப்பிட்ட நபர் இலங்கை பிரஜையாக இருந்தால்போதும். இந்த விடயங்கள் கூட தெரியாமலே இவர்கள் கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அத்துடன் நீதிமன்றமும் அவர்களின் மனுக்களை இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கின்றது என்பதை பார்க்க இவ்வாறான சில்லறை விடயங்கள் ஒருபோதும் தாக்கம் செலுத்தாது என அவர் இதன்போது தெரிவித்தார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment