"பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளரான கெஹலிய, முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்"
தான் சஹ்ரான் என்று குறிப்பிட்டது முழு முஸ்லிம் சமூகத்தையும் என பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக மாநாடொன்றில் தெரிவித்த கருத்துகள் முழு முஸ்லிம் சமூகத்தையும் அகௌரவப்படுத்தியுள்ளது. அதனால் அவர் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக்கோரவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வேண்டுகோள் விடுத்தார்.
நேற்று அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தானும், கெஹெலிய ரம்புக்வெல்லவும் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கெஹெலிய ரம்புக்வெல்ல மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் அடிப்படைவாதி சஹ்ரானுக்கும், பொட்டு அம்மானுக்கும் சம்பளம் வழங்கியதை ஏற்றுக்கொண்டார் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து உரையாற்றியபோதே பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் பேசுகையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மறுதினம் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக மாநாடொன்றினை நடத்தினார். அவர் சஹ்ரான் தொடர்பில் தெரிவித்த கருத்துகளுக்கு கோத்தாபய கோபப்பட்டிருக்க வேண்டும். நான் உளவு தகவல் வழங்குவது சஹ்ரான் எனக் குறிப்பிட்டது முழு முஸ்லிம் சமூகத்தையும் என்று குறிப்பிட்டு முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்திவிட்டார்.
சஹ்ரான் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் நடாத்தி 250 கத்தோலிக்கர்களை பலியெடுத்தவர். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்தவர். ஹோட்டல்களையும், ஆலயங்களையும் சேதப்படுத்தியவர். இவ்வாறான ஒருவரை முழு முஸ்லிம் சமூகத்துடன் ஒப்பிட்டமை முஸ்லிம்களுக்கு அகௌரவமாகும். கெஹலிய ரம்புக்வெல்ல பொதுஜன பெரமுனவின் ஊடகப் பேச்சாளராவார். ஒரு சிலர் செய்த பயங்கரவாதத்தை முழு முஸ்லிம் சமூகத்தின் மீதும் பொறுப்புக்கூற முடியாது.
சஹ்ரானின் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கெஹெலிய ரம்புக்வெல்ல சி.ஐ.டி.யினரால் விசாரணைக்கு அழைக்கப்படவேண்டும். இது தொடர்பில் சி.ஐ.டி.யில் நான் முறைப்பாடு செய்யவுள்ளேன் என்றார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்
Ponna Keheliya.. Racist Culprit..
ReplyDelete