ஜனாதிபதி தேர்தலை பிற்போட, ரணில் சதித்திட்டம் - வாசுதேவ குற்றச்சாட்டு
ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குமாறு தெரிவித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகின்றார். இதன் மூலம் தேர்தலை பிற்போடும் சதித்திட்டமே மேற்கொள்ளப்படுகின்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பத் தில் இருந்தே ஜனாதிபதி தேர்தலை பிற்படுத்தும் நோக்கில் ஒருசில தரகர்களுடன் இணைந்துகொண்டு சதித்திட்டங்களை மேற்கொண்டு வந்திருந்தார். தற்போது ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவது தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றார். நீதிமன்றத்துடன் இந்த நடவடிக்கையை சிக்கலாக்கி இதன் மூலம் தேர்தலை பிற்படுத்துவதே அவரின் திட்டமாகும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்படுவதற்கு பிரதான காரணமாக இருப்பது, சஜித் பிரேமதாசவுடன் அவருக்கு இருக்கும் பிரச்சினையாகும். அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைவது நிச்சயமாகும். அதனை தடுப்பதற்கான இறுதி முயற்சியாகவே இதனை மேற்கொள்ளப்போகின்றார். அதிகாரத்தை மாற்றும் தேர்தலாகவே ஜனாதிபதி தேர்தல் இடம்பெறப்போகின்றது. அதனால் மக்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும். அவரின் இந்த நடவடிக்கைக்கு அரசாங்கத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவளிப்பதில்லை.
மக்கள் விடுதலை முன்னணி இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் அவர்கள் இறுதி நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மறைமுகவாகவேனும் ஆதரவளிப்பார்கள். ஏனெனில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் அவர்களே பிரதமரையும் இந்த அரசாங்கத்தையும் பாதுகாக்க மும்முரமாக இருந்தார்கள். அதனால் அவர்கள் எமது கூட்டணியை பரம விரோதியாகவே பார்க்கின்றார்கள். ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் எமது வேட்பாளருக்கு விழுவதை தடுக்கும் நோக்கிலே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றது.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. இவர்கள் இந்த நிலைமையை ஜனநாயக முறையிலான விவாதமே இடம்பெறுவதாக தெரிவிக்கின்றனர். அப்படியாயின் அமைச்சர்கள் இருவருக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்கின்றேன். ஜனநாயக முறைப்படி செயற்படுவதாக இருந்தால் ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்காத நிலையில் தானே ஜனாதிபதி வேட்பாளர் என தெரிவித்து வரும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக ஏன் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றது. இதுதானா அவர்களின் ஜன நாயகம் என்று கேட்கின் றோம் என்றார்.
Post a Comment