Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித், இழுபறிக்குப் பின் இணக்கப்பாடு - தினகரன் வெளியிட்டுள்ள செய்தி

- எம்.ஏ.எம்.நிலாம் -

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய நீண்டநாள் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.  கட்சித்தலைவர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் நேற்று முன்தினமிரவு (20) நடைபெற்ற நீண்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தினகரனுக்குத் தெரிவித்தன.

இந்த இணக்கத்திற்கமைவாக, எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச அறிவிக்கப்படுவாரென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பைக் கட்சியின் யாப்பு விதிகளுக்கமைய மேற்கொள்வதென்றும் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். வேட்புமனு குழுவில் பெயரைப் பரிந்துரைத்துப் பெரும்பாலானவர்களின் ஆதரவுடன் அறிவிப்பைச் செய்வதென்றும் தேவையேற்படின் வாக்கெடுப்பு நடத்துவதெனவும் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவைக் கூட்டி மீண்டும் அனைவரும் பொது இணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாகக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிற்குப் புதிதாக 25பேரை நியமிப்பதற்குப் பிரதமர் எடுத்திருந்த தீர்மானமும் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த இணக்கதிற்கமைய கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் நீடிப்பார் எனவும் தெரியவருகிறது.

கட்சிக்காக அவரது அர்ப்பணிப்பான சேவையைக் கருத்திற்கொண்டும் கஷ்டமான காலகட்டத்தில் கட்சியைக் கட்டிக்காத்தவர் என்ற வகையிலும் பிரதமருக்குத் தொடர்ந்தும் கட்சித் தலைமைப்பொறுப்பை வகிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், ஐக்கிய ​தேசிய கட்சிக்குள் நிலவிய ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் களமிறங்க அனுமதிக்க வேண்டும் என்றும் இல்லையேல், மாற்றுவழியைத் தேட வேண்டிவருமென்றும் கட்சியின் பெரும்பானலான அமைச்சர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். எழுத்துமூலக் கோரிக்கைகளையும் அவர்கள் பிரதமருக்குக் கையளித்திருந்தனர். இவ்வாறு சர்ச்சை நீடித்து வந்த நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பை நடத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தாம் இல்லாமல் போட்டியிட்டு வெற்றியீட்டிக்காட்டுமாறும் தெரிவித்திருந்தார். அதுமாத்திரமன்றி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுடன் பொதுத்தேர்தலிலும் தாம் வென்றுகாட்டுவதாகத் தெரிவித்திருந்தார்.

ஆனால், இரு தரப்பினரும் மேற்கொண்ட விட்டுக்கொடுப்பின் காரணமாக ஐக்கிய தேசிய கட்சியில் ஏற்பட்டிருந்த உட்கட்சிப் பூசல் இப்போது முற்றிலுமாக முடிவுக்கு வந்துள்ளது.

இதேநேரம், சபாநாயகர் கரு ஜயசூரியவும் வேட்பாளராகக் களமிறங்க விருப்பம் கொண்டுள்ளார் என்று வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தன. சிவில் அமைப்பினரின் கோரிக்கைவிடுக்கப்பட்டபோதிலும், தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் அவ்வாறு விருப்பம் தெரிவிக்கவில்லை என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மனமாற்றத்தைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டுவதாக அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆதரவாளர் அணியைச் சேர்ந்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

2 comments:

  1. Wow 😮 good for motherland Sri Lanka 🇱🇰

    ReplyDelete
  2. தற்போதைய நாட்டு சூழ்நிலையினைப் பொறுத்து சமமான வேட்பாளர் ஒருவரை ஐதேமு பெயர் குறிப்பிடுவது காலத்தின் மிக முக்கிய தேவையாக இருக்கின்றது. அந்த வகையில் ஐதேமு யில் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வும் விட்டுக் கொடுப்பும் இலங்கைவாழ் முஸ்லிம்களைப் பொறுத்தளவில் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

    ReplyDelete

Powered by Blogger.