"கோத்தபாய போட்டியிட முடியுமா என்பது, இன்னும் சந்தேகமாகவே இருக்கின்றது"
கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை இன்னும் இரத்து செய்யப்படவில்லை என்பதால் அவரால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது இன்னும் சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இப்போது தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இப்போது இலங்கையின் தேசிய அடையாள அட்டை தொடர்பான பிரச்சினை உருவெடுத்துள்ளது.
தேசிய அடையாள அட்டை மற்றும் குடியுரிமை இரத்து செய்யப்படாமை குறித்த பிரச்சினைகள் நாட்டில் பல பகுதிகளிலும் பேசப்பட்டு வருகின்றன. இன்னும் இரட்டைக்குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை.
இரத்து செய்யப்பட்டதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் எதனையும் காண்பிக்கவில்லை. தேர்தலுக்கு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்காக இன்னும் சொற்ப வாரங்களே காணப்படுகின்றன.
நவம்பர் 07ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்யும் வேளையில் அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கோத்தபாய ராஜபக்சவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா? இதற்கு பதிலளியுங்கள்.
இப்போதிருக்கும் சூழ்நிலைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டதா இல்லையா? இந்த விடயம் இன்னும் கேள்விக்குறி.
ஏன் அப்படிப்பட்ட நபர் குறித்து பேச வேண்டும். அமெரிக்கா அரசாங்கமும் இன்னும் அறிவிக்கவில்லை. அமெரிக்க தூதரகமும் உத்தியோகபூர்வ ஆவணத்தை வெளியிடவில்லை.
இப்படியிருக்கின்ற நிலையில், அவர் குறித்து பேசுவது அநாவசியமான விடயம். மாறாக சமல் ராஜபக்ச குறித்து பேசலாம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment