உறுதி வழங்கிய சஜித், புதன்கிழமை அறிவிப்பேன் என ரணில் வாக்குறுதி - சுமந்திரன் டபள் கேமா..?
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து புதன் கிழமை கட்சியின் செயற்குழுவைக் கூட்டி இறுதி முடிவினை அறிவிப்பேன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்களது
கூட்டம் நேற்று -20- மாலை அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அமைச்சர்களான சஜித் பிரேமதாச மலிக்சமரவிக்கிரம அகிலவிராஜ் காரியவசம் கபீர்ஹாசிம் நவீன் திஸாநாயக்க ராஜித சேனாரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர். பங்காளிக்கட்சிகளின் சார்பில் அமைச்சர்களான சம்பிக்கரணவக்க மனோ கணேசன் பழனிதிகாம்பரம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்தக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதின் ஆகியோர் பங்கேற்கவில்லை. இந்தக் கூட்டத்தின்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் சஜித் பிரேமதாச மஹிந்த ராஜபக்ஷ அணியினரை வெற்றிகொள்ள வேண்டும் என்பதனாலேயே ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட விரும்புகின்றேன். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சியின் தலைவராகவும் பதவி வகிக்க வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெற்ற பின்னரும் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே தொடரவேண்டும். அதுவே எனது நிலைப்பாடாகும். இதனால்தான் நானும் பெரும்பான்மையான எம்.பி.க்களும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றோம் என்று கூறியுள்ளார்.
பிரதமராக தொடர்ந்தும் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே பதவி வகிக்க வேண்டும் என்பதே அவர்களது நிலைப்பாடாகவுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதே கருத்தை அமைச்சர் ஹபீர்ஹாசிமும் எடுத்துக் கூறியுள்ளார்.
இங்கு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விவகாரம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் என்னுடன் தொடர்புகொண்டு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் நகல் ஒன்றினை தயாரித்துள்ளதாகவும் அது குறித்து அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மனோ கணேசன் ஆகியோரிடம் கலந்துரையாடி ஒப்புதலை பெற்றுக்கொண்டுள்ளதாகவும் கூறினார். இதனையடுத்தே இந்த விடயம் தொடர்பில் ஆராயலாம் என முடிவு எடுக்கப்பட்டது என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன் சுமந்திரன் என்னுடன் தொடர்புகொள்ள வில்லை . மாறாக நானே அவருடன் தொடர்புகொண்டிருந்தேன். அப்போதுதான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்புத் தொடர்பில் அவர் எனக்குத் தெரிவித்தார்.
இதனைவிடவேறு ஒன்றும் அவர் என்னுடன் பேசவில்லை. அந்த விடயத்திற்கு நான் ஒப்புதல் கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளமை தவறானதாகும். சிறுபான்மையினருக்கு சாதகமான மக்களால் தெரிவு செய்யப்படும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை முற்றுமுழுதாக ஒழிப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மைக் கட்சிகள் உடன்படவில்லை. அதுவே எமது நிலைப்பாடாகவுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தவேளை குறுக்கிட்ட அமைச்சர் திகாம்பரம் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் என்னைச் சந்தித்த சுமந்திரன் எம்.பி. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் அமைச்சரவையில் யோசனை சமர்ப்பிக்கபடவுள்ளமை தொடர்பில் குறிப்பிடத்துடன் தமக்கு ஆதரவு வழங்குமாறும் கோரியிருந்தார்.
ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் விடயத்தில் எமது கூட்டணியின் நிலைப்பாடு எதிரானது என்பதை நான் அவரிடம் தெரிவித்ததுடன் அதற்கு ஆதரவு வழங்க முடியாது என்று தெரிவித்திருந்தேன் என்று எடுத்துக்கூறியுள்ளார்.
இதனையடுத்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் மலிக்சமரவிக்கிரம சுமந்திரன் எம்.பி.யை இன்று பாராளுமன்றத்தில் சந்தித்தபோது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விவகாரம் தொடர்பில் வினவியபோது அந்த விடயத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று அவர் மறுத்ததாகவும் தெரிவித்தார்.
ஹக்கீம்மீது ரணில் விசனம்
இதன்போது பிரமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிப்பு விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டதையடுத்து அமைச்சர் ஹக்கீம் விடயம் அறியாது என்மீது பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை ஊடங்களில் சுமத்தியுள்ளார். இது தவறான நடைமுறையாகும். நிறைவேற்று அதிகார ஒழிப்பு தொடர்பில் யோசனையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தெரிவித்திருந்தார். அதனை அறியாது அமைச்சர் ஹக்கீம் மிகக்கடுமையாக முறைதவறி செயற்பட்டிருக்கின்றார் என்று விசனம் தெரிவித்துள்ளார்.
இந்த வாதப்பிரதிவாதங்களையடுத்து ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் புதன்கிழமை ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவைக்கூட்டி இறுதியான முடிவினை அறிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதி வழங்கி்யதையடுத்து கூட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
Post a Comment