Header Ads



சவூதி - இலங்கை 45 வருட உறவு - ஹக்கீம் மகிழ்ச்சி


சவூதி அரேபியாவுக்கு இலங்கைக்கும் இடையே 1974இல் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டது. தற்போது அதன் 45ஆவது வருட பூர்த்தியை நினைவுகூருகிறோம். இரு தரப்பிலான உறவுகள் நிலையான நட்பின் வெளிப்பாடாகவும், பரஸ்பரம், புரிந்துணர்வு மற்றும் நெருங்கிய ஒத்துழைப்பு என்பவற்றின் அடையாளங்களாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (23) கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற சவூதி அரேபியாவின் 89ஆவது சுதந்திர தின நிகழ்வில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

சுமார் 136,000 இலங்கையர் தற்போது சவூதியில் வசித்துவருகின்றனர். தமது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் தாயகத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெரும் பங்காற்றும் இவர்கள், சவூதி அரேபியாவின் பொருளாதார அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கின்றனர். 

மத்திய கிழக்கில் இலங்கையின் முக்கியமான வர்த்தக பங்காளியாக சவூதி அரேபியா திகழ்கிறது. சவூதி அரேபியாவுக்கான ஏற்றுமதி பொருட்களில் தேயிலை 25% ஆகும். இலங்கையின் உற்பத்திகளை இறக்குமதி செய்யும் பங்காளி நாடுகளில் சவூதி அரேபியா 23ஆவது இடத்தை பெறுவதோடு, சவூதியின் இறக்குமதியாளர்கள் பட்டியலில் இலங்கை 82ஆவது இடத்திலுள்ளது. இரு நாடுகளினதும் இருதரப்பு வர்த்தக பெறுமானம் 2018இல் 327.77 அமெரிக்க டொலர் மில்லியன்களாகும்.

இலங்கை சவூதியோடு 7 இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளதோடு, அதன்மூலம் நமது கூட்டுறவு பல துறைகளிலும் சக்திமிக்கதாக பரிணாமிக்கின்றது. கடந்த பல ஆண்டுகளில் நமது இருநாடுகளின் மக்களிடையேயும் உள்ள கலாசார தொடர்பும் வலுவடைந்து வந்திருக்கின்றது. கொழும்புக்கும் சவூதிக்கும் இடையே நாளாந்தம் விமான பயணங்கள் மேற்கொள்ளப்படுவதோடு ரியாத், தமாம் மற்றும் ஜித்தா போன்ற நகரங்களையும் அது இணைக்கின்றது. 

மத்திய கிழக்கிலிருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளில் சவூதி பயணிகள் மிகக்கூடுதலாக உள்ளனர். 2018இல் மாத்திரம் 34703 விமானப் பயணங்கள் இலங்கைக்கு வந்து சேர்ந்திருப்பதாக பதியப்பட்டுள்ளது. சவூதிக்கான கிரமமான ஹஜ் யாத்திரை தூதுக் குழுவுக்கு சவூதி அரசு வழங்கும் ஒத்துழைப்பும் உதவிகளும் இரு நாட்டு கலாசார உறவுகளை மேலும் உறுதிமிக்கதாக்க உதவுகின்றது. 

சவூதியின் அபிவிருத்திக்கான முதலீடுகள் மூலம் 1981 முதல் இலங்கைக்கு பல்வேறு அபிவிருத்திகளுக்கான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. களுகங்கை திட்டம், பதுளை செங்கலடி பாதை, வயம்ப பல்கலைக்கழக அபிவிருத்தி, கொழும்பில் அமைக்கப்பட்ட Epilepsy வைத்தியசாலை மற்றும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடம் என்பன இதில் உள்ளடங்கும் 

மேலும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முகமாக சவூதியின் பாராளுமன்ற தூதுக்குழுவொன்றும் சூரா கவுன்சில் தலைமையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் கபீர் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, காதர் மஸ்தான் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு

No comments

Powered by Blogger.