சஜித் வேட்பாளராவது 100 வீதம் உறுதியானது - எழுத்துமூலம் நிபந்தனையுடன் நிறுத்த ரணில் இணக்கம்
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை பெயரிட கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று (24) இரவு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே பிரதமர் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
2
ஐதேகவின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை, கட்சியின் அதிபர் வேட்பாளராக நிறுத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உயர்மட்ட உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், எழுத்துமூல உடன்பாடு ஒன்றின் அடிப்படையில் அவரை வேட்பாளராக நிறுத்த ஐதேக தலைமை இணங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் நேற்று ஐதேகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
இதன்போதே, சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளார்.
எனினும், ரணில் விக்ரமசிங்கவே ஐதேகவின் தலைவராகவும், பிரதமராகவும் நீடிப்பார் என்ற எழுத்துமூல உத்தரவாதத்தை சஜித் பிரேமதாசவிடம் பெற்றுக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான வாக்குறுதியையும் சஜித் பிரேமதாச வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்மக்களின் பிரச்சினைக்கு, நாடாளுமன்ற வழிநடத்தல் குழுவினால் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை நேற்றுமாலை நடந்த ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுடனான சந்திப்பிலும் சஜித் பிரேமதாசவை போட்டியில் நிறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
நாளை நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக முறைப்படி தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment