Header Ads



மொட்டு தலைமைத்துவத்தை மஹிந்த ஏற்றால் SLFP உறுப்புரிமையும், எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கேள்விக்குறியாகும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றால்  சுதந்திர கட்சியின் உறுப்புரிமையும் எதிர்க்கட்சி தலைவர் பதவியும் கேள்விக்குறியாகும் என கட்சியின் பிரதி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர் தெரிவித்தாவது :

பலமானதொரு கூட்டணியை அமைப்பதாகக் கூறிய ஐக்கிய தேசிய கட்சி தற்போது அதனை ஒத்தி வைத்துள்ளது. பொதுஜன பெரமுன 11 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு சகல அரசியல் நகர்வுகளையும் அதானித்து அதன் பின்னர் செப்டம்பர் மாதம் 3 ஆம் திகதி சுதந்திர கட்சி தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். 

2 ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுதந்திர கட்சியின் மாநாடு சில காரணிகளால் 3 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் காலம் நெருங்குவதால் அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்றன. ஆனால் நாம் ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கலமிறங்கும் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை. 

ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக பலம் மிக்க கூட்டணியொன்றை அமைத்து அதற்கமைய செயற்படுவோம் என அவர் தெரிவித்தார்.

(எம்.மனோசித்ரா)

No comments

Powered by Blogger.