கட்டுநாயக்க விமான நிலைய சேவை, மீண்டும் வழமைக்கு திரும்பியது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை நோக்கி வரும் சில விமானம் திருப்பி அனுப்பப்படுவதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்கவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து விமானங்களையும் மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படுவதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை வீசிய கடும் காற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR - 662 ரக விமானம், அதிகாலை 3.15 மணியளவில் மத்தலவில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானத்தில் 155 பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களை விமானத்தில் இருந்து வெளியே இறக்காமல் இன்று காலை 5.39 மணியளவில் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி விமானம் பயணித்துள்ளது.
அதே போன்று எயார் அரேபியா விமான சேவைக்கு சொந்தமான G - 9503 ரக விமானம் 168 பயணிகளுடன் மத்தலவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. பின்னர் காலை 5.15 மணியளவில் விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி சென்றுள்ளனர்.
தற்போது விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காலநிலை சற்று சீரடைந்துள்ளமையினால் மீண்டும் விமான சேவை வழமைக்கு திரும்பியுள்ளது.
Post a Comment