Header Ads



மூடிய கதவுக்குள் நான், சந்திப்புகளை நடத்துவதில்லை - பகல் வெளிச்சத்திலே கோத்தாபயவை சந்தித்தேன்

கோத்தாபய ராஜபக்சவுடன் தாம் இரகசிய சந்திப்பை நடத்தவில்லை என சிறிலங்காவின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், கோத்தாபய ராஜபக்சவை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்ததாகவும், அது பகல் வெளிச்சத்தில் வெளிப்படையாக நடந்த சந்திப்பே அது என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் நடந்த இந்தச் சந்திப்பு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துள்ள, அமைச்சர் சாகல ரத்நாயக்க,

“அறுவை சிகிச்சைக்குப் பின்னர் நாடு திரும்பிய நான் அவரைச் சந்தித்தேன், சந்திப்பு குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழுமையாக அறிந்திருந்தார்.

நான் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டேன். அப்போது, அமைச்சர் கபீர் காசிமும், முன்னாள் பாதுகாப்பு செயலரின் அறையில் இருந்தார்.

அமைச்சர் கபீர் காசிம் ஏன் அங்கு வந்திருந்தார் என்று விசாரிப்பது எனது கடமை அல்ல.  நான் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர் புறப்பட்டு சென்று விட்டார்.

கோத்தாபய ராஜபக்சவுடன் அவரது உடல்நிலை குறித்து நான் சுருக்கமாக உரையாடினேன். அந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை.

இது ஒரு மனிதாபிமான சந்திப்பு மட்டும் தான்.  அரசியல் போட்டியாளர்களாக இருந்தாலும் நாங்கள் எதிரிகள் அல்ல.

எனது அரசியல் போட்டியாளர்களுடன், நான் எப்போதும் நட்புறவைப் பேணி வருகிறேன். நாகரிகமான முறையில் அரசியலில் ஈடுபடுவது முக்கியம்.

ஏனைய பலரையும் போன்று, நான் எனது அரசியல் போட்டியாளர்களுடன் மூடிய கதவு சந்திப்புகளை நடத்துவதில்லை.

நான் அவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், கட்சித் தலைமைக்கு முன்பே அறிவித்து, அனுமதியைப் பெறுகிறேன்” என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

1 comment:

  1. இது ஒரு நோயாளியிடம் சுகம் விசாரித்த சந்திப்பு.இதை போய் பெரிய விடயமா...

    ReplyDelete

Powered by Blogger.