கோத்தபாய வேட்பாளரானால் தமிழ் - முஸ்லிம் மக்கள் மீண்டும் அச்சத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும்
(எம்.ஆர்.எம்.வஸீம்)
கோத்தபாய ராஜபக்ஷவுக்கு சவாலான வேட்பாளர் ஐக்கிய தேசிய கட்சியிடம் இல்லை. நாங்கள் பெயரிடும் வேட்பாளரே சவாலாக இருக்கப்போகின்றார்.
அதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் எமக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.
அத்டதுடன் கோத்தபாய வேட்பாளரானால் தமிழ் முஸ்லிம் மக்கள் மீண்டும் அச்சத்துக்குள்ளாகும் நிலை ஏற்படும். அதனால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாங்கள் பெயரிடும் வேட்பாளரை ஆதரிக்க முன்வரவேண்டும் எனவும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி அறிவிக்கவுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ஷ் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மீண்டும் நாட்டுக்குள் வெள்ளைவேன் கலாசாரம் ஆரம்பிக்கும். அதபோல் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை ஏற்படும். அவ்வாறு அவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டால் ஜேர்மனின் ஹிட்லர் போன்றே செயற்படுவார். கடந்தகால சம்பவங்களை இதற்கு சிறந்த உதாரணமாக தெரிவிக்கலாம்.
அதனால் கோத்தபாயவை தோட்கடிக்க ஒரே மாற்றுவேட்பாளரை மக்கள் விடுதலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்க இருக்கின்றது. ஐக்கிய தேசிய கட்சியிடம் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் இல்லை. அதனால்தான் கட்சிக்குள் வேட்பாளர் தெரிவில் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. அரசியல் அனுபவம் உள்ள ஒருவரையே நாங்கள் பெயரிடுவோம். அரசியல் அனுபவம் இருப்பவருக்கே பொதுமக்களின் நிலைமைகளை உணர்ந்து நாட்டை கொண்டுசெல்ல முடியும்.ராணுவத்தில் அனுபவம் இருப்பவருக்கு ராணுவத்தை நிர்வகிக்கவே முடியும்.
மேலும் கோத்தபாய ராஜபக்ஷ் இனவாதத்தை தூண்டி நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியவர். தமிழ். முஸ்லிம் மக்கள் அதனை நன்கறிவார்கள். கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் பாரிய அச்சத்திலே வாழ்ந்து வந்தார்கள். அதனால் மீ்ண்டுமொருமுறை அவ்வாறான கலாசாரம் ஏற்படுவதை விரும்பமாட்டார்கள்.
அதனால் தமிழ் முஸ்லிம் மக்கள் எமது வேட்பாளரை வெற்றிபெறச்செய்ய முன்வரவேண்டும். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியிலும் கோத்தபாயவுக்கு எதிராக போட்டியிடக்கூடிய வேட்பாளர் இல்லை.
அதனால்தான் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டிருக்கின்றது. எனவே கோத்தபாய ராஜபக்ஷ்க்கு சவாலான வேட்பாளர் மக்கள் விடுதலை முன்னணியிடமே இருக்கின்றது. அவரை வெற்றிபெறச்செய்ய ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களும் இம்முறை எமக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றார்.
Post a Comment